கோலாலம்பூர், 31 டிசம்பர் (பெர்னாமா) - தேசிய எரிசக்தி மாற்ற குறிக்கோள் திட்டம், என்.இ.தி.ஆரைச் செயல்படுத்தும் முயற்சியாக 2024ஆம் ஆண்டு எரிசக்தி ஆற்றல் மற்றும் பாதுகாப்பு சட்டம், சட்டம் 861 மற்றும் 2024ஆம் ஆண்டு எரிசக்தி ஆற்றல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் நாளை அமலுக்கு வருகிறது.
தீபகற்ப மலேசியா மற்றும் லபுவான் கூட்டரசு பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் சட்டம் 861, கடந்த நவம்பர் 26ஆம் தேதி அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டதாக எரிசக்தி ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சட்டம் 861 மலேசியாவை மேலும் ஆற்றல் நிலைத்தன்மை கொண்ட நாடாக உருவாக்கும் என்று எரிசக்தி ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதேவேளையில் 2024ஆம் ஆண்டு எரிசக்தி ஆற்றல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் எரிசக்தி நிர்வாகிக்கான நியமமனத்தின் அவசியத்தை ஆராய்கிறது.
சட்டம் 861 அமலாக்கத்தைத் தொடர்ந்து, 1990ஆம் ஆண்டு மின்சார விநியோக சட்டத்தின் கீழ், 2008ஆம் ஆண்டு திறமையான மின்சார நிர்வகிப்பு விதிமுறைகள் ரத்து செய்யப்படும்.
தற்போதைய தேவைக்காக, ஏற்புடைய சீரான எரிசக்தி கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
மற்றொரு நிலவரத்தில், 2025ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி எரிசக்தி ஆணையத்தின் தலைவராக அரசாங்கத் தலைமைச் செயலாளரான டத்தோ ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்காரை நியமிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சு , பொதுச் சேவை துறை, பொது தனியார் ஒத்துழைப்பு பிரிவு, UKAS மற்றும் மாநில அரசாங்க நிர்வாகம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் சேவையாற்றியிருக்கும் 55 வயதுடைய ஷம்சுல் அஸ்ரி 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டிருப்பதாக எரிசக்தி ஆணையம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)