பொது

120,000 ரிங்கிட் மதிப்புடைய போதை மாத்திரைகளுடன் தாய்லாந்தில் மலேசியர் கைது

05/01/2025 04:55 PM

கோத்தா பாரு, 05 ஜனவரி (பெர்னாமா) --   கடந்தாண்டு டிசம்பர் 30ஆம் தேதி, தென் தாய்லாந்து, கோலோக் நகரில் உள்ள ஒரு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒரு லட்சத்து 20,000 ரிங்கிட் மதிப்புடைய பல்வேறு வகை போதைப்பொருளை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட மலேசியாவைச் சேர்ந்த 24 வயதுடைய அவ்வாடவர், அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என நம்பப்படுவதாக கோலோக் மாவட்ட போலீஸ் தலைவர், ஜட்சாடவிட் இங்பிரபான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அவ்வாடவருமிடருந்து 1,943 Ekstasi மாத்திரைகள், 1,510 Eramin மாத்திரைகள் உட்பட மேலும் பல வகையிலான போதைப் பொருளைப் போலீசார் கைப்பற்றியதாக ஜட்சாடவிட் தெரிவித்தார்.

தற்காலிகமாக தடுத்து வைப்பதற்காக அந்நபர் நாராதிவாட் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்படுவார் என்றும் சுங்கை கோலோக் மருத்துவமனையில் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

அவ்வாடவரிமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் எங்கிருந்து கிடைத்தது என்பதை தாய்லாந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், கைது செய்யப்பட்டவருக்கு முந்தைய குற்றச்செயல் பதிவுகள் உள்ளதா என்று விசாரிக்கப்படுகிறது.

கடந்தாண்டு நவம்பர் தொடக்கத்தில் 6,000 போதை மாத்திரைகளுடன், ஒரு பாடகி உட்பட ஆறு மலேசியர்கள் கைது செய்யப்பட்டப் பின்னர், தாய்லாந்து போலீசாரின் மிகப்பெரிய பறிமுதல் நடவடிக்கையாக இது கருத்தப்படுகிறது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட உள்ளூர் ஆடவர் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற போதைப்பொருள் செயலகம் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையும் தாய்லாந்து போலீசுடன் கைக்கோர்த்துள்ளது.

இந்த ஒத்துழைப்பின் மூலம் உள்நாட்டு சந்தைகளில் போதைப்பொருள் விற்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவிருப்பதாக, போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ காவ் கொக் சின் கூறினார்.

போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக, மலேசிய ஆடவர் ஒருவர் தென் தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கைது செய்யப்பட்டதாக, பெர்னாமா தொடர்பு கொண்டபோது டத்தோ ஸ்ரீ காவ் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அவ்வாடவர், சுங்கை கோலோக்கை சுற்றி போதைப்பொருளை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)