பொது

இலக்கவியல் துறையை மேம்படுத்த பிற நாடுகளுடன் ஒத்துழைப்பு

07/01/2025 01:02 PM

கோலாலம்பூர், 06 ஜனவரி (பெர்னாமா) - இலக்கவியல் மயமாக்கலை நோக்கிய உலகளாவிய மாற்றத்தில், மலேசியாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 2023ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கவியல் அமைச்சு, நவீன வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்திலும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகின்றது.

அந்த வகையில், இலக்கவியல் துறையை மேம்படுத்தும் நோக்கில் பிற நாடுகளுடன் இணைந்து செயலாற்றுவதோடு பல முன்னேற்றங்களையும் மலேசியா அடைந்து வருவதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

''இந்தியாவைச் சேர்ந்த 17 நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1,943 வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. முதலாவது, நெஸ்காம் மற்றும் எம்ப்டெக் ஆகியவற்றுக்கு இடையில். இது அரசாங்கத் திட்டங்களுக்கான வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கு ஆகும். அடுத்து, நெஸ்கோம் மற்றும் பி.கோம். இது, வர்த்தக பங்காளித்துவத்திற்கானது. இறுதியாக, எம்.ஐ.டி.சி உருவாக்க அரசாங்கங்களுக்கு (இந்தியா-மலேசியா) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், '' என்றார் அவர்.

அனைத்து துறைகளிலும் குறிப்பாக கல்வித் துறையில் இலக்கவியலின் பயன்பாடு அனைத்து தரப்பினருக்கும் மிகவும் அவசியமானது.

எனவே, அனைத்து பள்ளிகளிலும் இலக்கவியல் ஆய்வகத்தை ஏற்படுத்துவது, மாணவர்களுக்கும் ஆசியர்களுக்கும் தொழில்நுட்பம் குறித்த அவசியத்தை எடுத்துரைப்பது, மக்களுக்கு அதன் தாக்கத்தைப் புரிய வைப்பது, அதைப் பயன்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது போன்றவை அம்சங்களிலும் கவனம் செலுத்தப்படும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

இதனிடையே,18ஆவது பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொள்ள நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதாகவும் அப்பயணத்தின்போது இலக்கவியல் துறையின் வளர்ச்சி சார்ந்த அம்சங்கள் குறித்து கலந்துரையாட விருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

''எனவே, ஒத்துழைப்பை மேற்கொள்ள இந்தியாவிற்கு போக முடிவெடுக்கப்பட்டது. எம்.ஐ.டி.சி ஏற்படுத்த நாங்கள் இந்தியாவிற்குச் செல்கிறோம். மலேசியா தரப்பில் நாங்கள் இருக்கிறோம். இந்தியா தரப்புடன் இணைந்து பணியாற்ற நம்பிக்கைக் கொண்டுள்ளோம். நமக்கு தேசிய ஏ.ஐ அலுவலகமும் உள்ளது. இலக்கவியல் மாற்றம் எப்படி விஷயங்களை மாற்றும் என்பதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த வகையான ஒத்துழைப்பின் வலிமையை நாம் அடையாளம் காண வேண்டியது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எனது அமைச்சும் இதில் கவனம் செலுத்துகிறது, '' என்றார் அவர்.

மேலும், மலேசிய இலக்கவியல் துறையின் மேம்பாட்டையும் மக்களின் நலனையும் கருதி, உள்கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் திறன்மேம்பாடு ஆகிய கூறுகளில் தாம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)