பொது

சமூக ஊடகத்திற்கான உரிமம்; பாதுகாப்பான இலக்கவியல் சூழலை வழங்கும்

06/01/2025 08:15 PM

கோலாலம்பூர், 06 ஜனவரி (பெர்னாமா) - மலேசியர்கள் எதிர்நோக்கும் இணைய அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான ஒரு முன்னெடுப்பாக இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி நாட்டின் சமூக ஊடகங்களுக்கான உரிமம் பெறும் கொள்கை அமலாக்கம் கண்டுள்ளது.

பாதுகாப்பான இலக்கவியல் சூழலை இக்கொள்கை உருவாக்குவதோடு, சிறார் பாலியல் துன்புறுத்தல் அம்சங்கள், CSAM போன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திற்கு சமூக ஊடகத் தளங்கள் பொறுப்பேற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார் வழக்கறிஞர் திருவரசு கே.முத்துசாமி.

அரசாங்கத்தின் இந்த உத்தரவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் WECHAT, TIK TOK, X போன்ற செயலிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் அந்த உரிமத்தை பெற்றுள்ளன.

டெலிகிராம் செயலிக்கு உரிமம் வழங்கும் செயல்முறை இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில், அது விரைவில் முழுமைப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திருவரசு கே.முத்துசாமி கூறினார்.

"மலேசியாவில் குறைந்தபட்சம் 80 லட்சம் சமூக வலைத்தள மற்றும் இணையத் தகவல் சேவையைப் பயன்படுத்துபவர்களை பயனீட்டாளர்களாக கொண்டிருக்கும் சமூக வலைத்தளங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்தாண்டு ஜூலை 27ஆம் தேதி தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், MCMC அறிவித்திருந்தது. இணையத்தில் நிறைய சட்டவிரோதமான சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் பாதுகாப்பு கருதி அரட்சாங்கம் இதை நடைமுறைப்படுத்தியது," என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் அதற்கான கட்டுபாடுகளை வலியுறுத்தியே இந்த உரிமத்தின் கீழ், அரசாங்கம் வழிகாட்டியை  வெளியிட்டுள்ளது.

எனவே, இந்த உரிமத்தைப் பெற்றுக் கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள் அல்லது நடத்துநர்கள் நிச்சயம் அவ்வழிக்காட்டியை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

இல்லையேல், பயனர்களின் பாதுகாப்பிற்கு அது மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று திருவரசு நினைவுறுத்தினார்.

அதேவேளையில், அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் இக்கொள்கையைப் பின்பற்றாது, சமூக ஊடகத் தளத்திற்கு உரிமை பெறாத அதன் நிறுவனங்கள் மீது, 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ், MCMC உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் விவரித்தார்.

"ஒரு குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதோடு பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 242-இன் கீழ் தற்போது தண்டனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 10 லட்சத்திற்கும் மேலான அபராதத்தை அவர்கள் செலுத்துவதுடன் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும்," என்றார் அவர்.

அதேவேளையில் உரிமம் பெற்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் அதற்கான வழிகாட்டியை முறையாகப் பின்பற்றத் தவறினால் தகவல் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 53இன் கீழ் 10 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேலான அபராதம் அல்லது பத்தாண்டுகால சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, வதந்திகளையும் ஆருடங்களையும் வெளியிடுவதை விடுத்து, மோசடிகளை அடையாளம் காண்பது பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கான கருவியாக அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று இன்றைய சட்டம் தெளிவோம் அங்கம் வாயிலாக சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துபவர்களை திருவரசு கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)