உலகம்

திபெத்தில் நிலநடுக்கம் ; பலி எண்ணிக்கை 126-ஆக அதிகரிப்பு

08/01/2025 07:53 PM

திபெத், 08 ஜனவரி (பெர்னாமா) -- சீனாவின், திபெத் வட்டாரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 பேராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடரப்பட்டு வருகின்றன.

அவசரகால பணியாளர்கள் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் அப்பகுதியில் உள்ள தற்காலிக வீட்டு கூடாரங்களும் மறைக்காணி காணொளிகள் காட்டுகின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரங்கள் கடந்து விட்ட வேளையில், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் சுழியத்திற்கும் கீழ் வெப்பநிலையில் ஓர் இரவைக் கழித்துள்ளதால், தாழ்வெப்பநிலை எனப்படும் குறைந்த வெப்பநிலை மற்றும் உடலுக்குத் தேவையான போதுமான நீர் இல்லாதது போன்ற அபாயத்தில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை, இமயமலையின் அடிவாரத்தில் சிக்கியுள்ள 400-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

30,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வேறு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட ரிக்டர் அளவைக் கருவியில் 6.8-ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அண்மைய சில ஆண்டுகளில் அவ்வட்டாரத்தில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்றாகும்.

இது உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்திற்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் திபெத் பகுதியில் உள்ள Tingri நகரில் அமைந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)