புத்ராஜெயா, 10 ஜனவரி (பெர்னாமா) - முதலாம் ஆண்டு தொடங்கி படிவம் நான்கு வரையிலான மாணவர்களுக்கு கல்வியமைச்சு வழங்கும் 2024, 2025-ஆம் ஆண்டுக்கான ஆரம்பப் பள்ளி உதவிநிதி பி.ஏ.பி, இம்மாதம் 13ஆம் தேதி தொடங்கி வழங்கப்படும்.
அதில், ஆறாம் படிவம் இரண்டாம் தவணையில் பயிலும் மாணவர்கள் மற்றும் 2025, 2026-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி தொடங்கி அந்நிதி வழங்கப்படும்.
அதைத் தொடர்ந்து, புதிதாக ஆறாம் படிவத்தில் இணைந்திருக்கும் மாணவர்களுக்கு ஜூலை ஒன்று முதல் பி.ஏ.பி உதவிநிதி விநியோகிக்கப்படும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் கல்வியமைச்சு தெரிவித்திருந்தது.
இவ்வாண்டு படிவம் ஆறு மாணவர்களுக்கும் பி.ஏ.பி உதவிநிதியை கல்வியமைச்சு முதன் முறையாக விரிவுப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் நிதியாக, தலா 150 ரிங்கிட் என்று மொத்தம் 79 கோடியே 12 லட்சத்து ஐந்தாயிரம் ரிங்கிட்டை மடானி அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிதியின் மூலமாக நாடு தழுவிய அளவிலுள்ள 52 லட்சம் மாணவர்கள் பலனடைவர்.
அதைத் தவிர்த்து, ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான நிதியை அவர்களின் பெற்றோரிடம் வழங்குவது போன்ற பல்வேறு முறைகளைப் பின்பற்றி, பள்ளிகளில் பி.ஏ.பி உதவிநிதி விநியோகம் செய்யப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.
மேலும், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான நிதியும் அவர்களின் பெற்றோரிடம் வழங்கப்படும் வேளையில், அவ்வாறு முடியாத நிலையில், அப்பணம் மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோரின் வங்கிக் கணக்கிலோ இவ்வாண்டு முதல் சேர்க்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)