ஈப்போ, 10 ஜனவரி (பெர்னாமா) - 2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வின் வரலாற்று பாடத்திற்கான தேர்வுத் தாள் வெளியானது தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு தயங்காது.
அப்பொறுப்பற்ற செயலைப் புரிந்த ஆடவரை தமது தரப்பு தற்போது கண்டறிந்துள்ளதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
"தவறான தகவலைப் பரப்பும் தரப்பினருக்கு நான் நினைவூட்ட விரும்புகிறேன். அவர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள பொறுப்பேற்க வேண்டும். அனைத்து தவறான நடவடிக்கைகளும் அமலாக்கத் தரப்பினரால் கண்காணிக்கப்படும் என்பதால், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நினைவூட்டுகிறேன்," என்றார் அவர்.
இன்று ஈப்போ, சாம் தெட் சீனப் பள்ளியில் நடைபெற்ற சீனப்புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் வோங் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, 2024-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் வரலாற்றுப் பாடத்திற்கான தேர்வுத் தாள் கசிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கல்வி அமைச்சு நேற்று தெரிவித்திருந்தது.
மேலும், இவ்விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அனைத்து பதிவேற்றங்களையும் கருத்தில் கொண்டு, துல்லியமான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சு கூறியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)