திருச்சூர், 10 ஜனவரி (பெர்னாமா) - தனித்துவமான குரலால், மெல்லிசை கானங்கள் மூலம் தமிழ் சினிமாவில், தனி பாணியில் பயணித்த பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் காலமானார்.
பளியத்து ஜெயச்சந்திர குட்டன் எனும் இயற்பெயரை கொண்ட அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று கேரளா, திருச்சூர் மருத்துவமனையில் தமது 80-வது வயதில் இயற்கை எய்தினார்.
80,90-களில் ரசிகர்களின் மனங்களில் தமது பாடல்கள் மூலம் ஆழமாக பதிந்திருக்கும் ஜெயசந்திரன், தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
1944-ஆம் ஆண்டு, மார்ச் மூன்றாம் தேதி எர்ணாகுளத்தில் பிறந்த ஜெயசந்திரன் தமது தந்தையைப் பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சியும் பெற்றார்.
1973-லிருந்து தமிழ்த் திரைப்பட பாடல்களைப் பாடத் தொடங்கிய அவர், ‘மணிப்பயல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தங்கச்சிமிழ் போல் இதழே’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் இவரை அறிமுகமானார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா ஜி.வி.பிரகாஷ்குமார் என்று பெரும்பாலான இசையமைப்பாளர்களோடு அவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.
பாடும் நிலா எஸ்.பி. பாலா, சிம்மக் குரல் கே.ஜே யேசுதாஸ் ஆகியோர், அன்று தமிழ்த் திரையுலகை ஆட்கொண்டிருந்த வேளையில், மலையாளத் தேசத்திலிருந்து மற்றுமொரு மயக்கும் குரலாக தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் ஜெயசந்திரன்.
மூன்று முடிச்சு படத்தில் ‘வசந்த கால நதிகளிலே’, அந்த 7 நாட்களில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’, நானே ராஜா நானே மந்திரி படத்தில் ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’, கிழக்கு சீமையிலேவில், கத்தாழங் காட்டு வழி’, மே மாதம் படத்தில் ‘என் மேல் விழுந்த’, போன்ற பிரலமான பாடல்கள் என்றுமே அவரை நினைவில் வைத்திருக்கும்.
இசைஞானியின் சோகமும் காதலும் நிறைந்திருக்கும் ராகங்களில், ஜெயசந்திரன் குரலில் வரும் பாடலுக்கு மயங்காதவர் இருக்க முடியாது.
துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவநயத்தோடு, குரலால் மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு ஜெயச்சந்திரன் பிரகாசித்தார்.
சுமார் 60 ஆண்டுகால இசை பயணித்திலிருந்து, ஜெயச்சந்திரன் விடைபெற்றாலும், அவரின் காந்தர்வக் குரல் காற்றின் வழி என்றுமே ஒலித்துகொண்டே இருக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)