கோலா சிலாங்கூர், 10 ஜனவரி (பெர்னாமா) -- மண்பாண்டங்கள், மனித நாகரீகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தொன்மையான கலையாகும்.
மண் சார்ந்த இக்கைவினைப் பொருட்கள் கலைப் பொருள்களாக மட்டுமின்றி தமிழர்களின் வாழ்வியலையும் வழிபாட்டையும் பறைசாற்றும் கூறாகவும் பிரதிபலிக்கின்றன.
மண் மனம் வீசும் இக்கைவினை கலைத் துறையின் மூலம் பொங்கல் காலங்களில் அதிகாமான வாடிக்கையாளர்களைக் கவர்ந்திருக்கும் கோலசிலாங்கூரில், மும்முரமாக நடைபெற்று வரும் பொங்கல் பானை தயாரிப்பு குறித்த சிறப்பு சந்திப்புடன் நமது நிருபர் கமலி காளிதாஸ்.
மனித நாகரிகத்தின் ஆதித்தொழிலாக பொற்றப்பட்ட மண்பாண்டத் தொழிலைப் புதிதாக கற்றுக் கொள்ளவும், பயிற்றுவிக்கவும் முறையான கல்விகள் இல்லை, மாறாக அனுபவங்கள் மட்டுமே கைக்கொடுக்கும்.
வடிவங்களுக்கு அப்பாற்பட்டு, தற்போது அதன் தரத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கி வருவதாக கூறுகின்றார் 36 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் கால் பதித்துள்ள ஆறு எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆறுமுகம் பெருமாள்.
''இப்படிதான் இருக்க வேண்டும் என்றில்லை. பொங்கல் பானை பண்டையக் காலத்திலிருந்தே அந்த வடிவம்தான். வேறு வடிவில் செய்தால் இதை பானை இல்லை என்று சொல்லிவிடுவார்கள். அதனால், அதே வடிவம் தான் ஆனால், அதனுடைய தரத்தை மட்டும்தான் நாங்கள் மாற்றியமைத்து கொண்டிருக்கிறோம். இதை ஒரு கலை என்று எடுத்துக்கொண்டால், என்னுடைய அப்பாவின் காலத்தில் இதை ஒரு விளையாட்டாக செய்யும்போது எனக்கு தெரியவில்லை. பிந்தைய காலத்தில் நாங்கள் அதை எடுத்து செய்யும் பொழுது மக்கள் பயன்படுத்துகின்றார்கள் அல்லவா, அதுதான் எங்களுக்கு சந்தோஷம்'', என்றார் அவர்.
கடந்த காலங்களில், பொங்கல் காலத்தில் மட்டுமே பானை செய்து வந்த வழக்கம் மாறி, இன்று மக்களின் பல தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையில் அகல்விளக்கு, எள் விளக்கு, மோட்ச விளக்கு, தூபக்கால், மண் சட்டி, உண்டியல் ஆகியவற்றையும் தினசரி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கை மற்றும் கால்களுக்கு அதிக வேலைக் கொடுத்து மண்பாண்டங்களைத் தயாரிக்கும் முறை படிபடியாக வளர்ச்சி கண்டு, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கத்திலும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆறுமுகம் கூறினார்.
''மற்றொன்று, சக்கரம் என்று சொல்லுவோம். விளக்குகள் செய்யும் சக்கரம். தொடக்கக் காலத்தில் மாட்டு வண்டி சக்கரம் என்று சொல்வார்கள். அதை சுற்றி விட்டு தான் விளக்குகள் செய்வார்கள். ஒரு 30 விளக்குகள் செய்தவுடன் நின்றுவிடும். பிறகு மீண்டும் சுற்றிவிட வேண்டும். அதுவே பானைகள் என்றால், ஒரு முறைக்கு சுற்றி விட வேண்டும். அதற்கு நான் என்ன செய்தேன் என்றால் காரில் உள்ள Gear Box-யை வைத்து, மின்சார இணைப்புடன் சேர்த்து நிற்காமல் ஓடும் அளவிற்கு செய்து வைத்தேன்'', என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தமது கொள்ளு தாத்தாவை அடுத்து, கடந்த 120 ஆண்டுகளுக்கு மேல் நான்காம் தலைமுறையாக, ஆறுமுகத்தின் மகனும், K.S.POTTERY நிறுவனத்தின் இயக்குநருமான ஆனந்த் இந்தப் பரம்பரைத் தொழிலைக் கடந்த சில ஆண்டுகளாகப் புதிய கோணத்தில் வழிநடத்தி வருகிறார்.
பொங்கல் பானை செய்வது தொன்மையான பணி என்றாலும் இன்றைய நவீன முறைக்கு ஏற்ப அதில் புது யுக்திகளைக் கொண்டு வந்திருப்பதால் பானையின் தரம் மேம்படுத்தப்படுவதோடு, வேலைப் பளுவும் குறைவதாக ஆனந்த் கூறுகின்றார்.
மேலும், இன்றைய இளைஞர்களுக்கு மண்பானை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு கைத்தொழில் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆர்வம் குறைந்துள்ளதால், அவர்களுக்கான சில ஆலோசனைகளையும் அவர் முன் வைத்தார்.
''அதாவது, எப்பொழுதும் படித்த படிப்பிற்குத் தான் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்பதல்ல. எந்தவொரு தொழிலாக குறிப்பாக கைத்தொழிலாக அல்லது உங்களுக்குப் பிடித்த தொழிலாக இருக்கட்டும். அதை தொடர்ச்சியாக செய்யுங்கள், எனவே தான் அதில் ஒரு லாபத்தைப் பார்க்க முடியும். ஒரு தொழிலை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு மட்டும் செய்தால் அதில் லாபம் பார்க்க முடியாது. எனவே, முழுமையாக செய்தால் அதில் நிச்சயம் தேர்ச்சியடைய முடியும்'', என்று ஆனந்த் கூறினார்.
மண்பாண்டங்களை வடிவமைப்பது, வெயிலில் உளரவைப்பது, வண்ணம் தீட்டுவது என்று வாடிக்கையாளர்களின் திருப்தியைக் கருத்தில் கொண்டு தயாரிப்பு பணிகளில் தாம் கவனம் செலுத்தத் தவறியதில்லை என்று ஆனந்த் குறிப்பிட்டார்.
இன்று கால மாற்றத்திற்கேற்ப பொங்கலிட, வெள்ளிப் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்கு மத்தியில் மண் பானைகளுக்கு மலேசியர்கள் வழங்கும் வற்றாத ஆதரவு குறித்தும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)