பொது

5 வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து; லாரி நிறுவனத்திற்கு எதிரான விசாரணை அறிக்கை நிறைவு

16/01/2025 05:09 PM

மலாக்கா, 16 ஜனவரி (பெர்னாமா) -- கடந்தாண்டு டிசம்பர் 23ஆம் தேதி மலாக்கா, வடக்கு நோக்கிச் செல்லும் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை, ப்ளசின் 204ஆவது கிலோமீட்டரில்,

ஐந்து வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் லாரி நிறுவனத்திற்கு எதிரான விசாரணை அறிக்கைகளை மலாக்கா சாலைப் போக்குவரத்துத் துறை, ஜேபிஜே நிறைவு செய்துள்ளது.

2010-ஆம் ஆண்டு தரை பொது போக்குவரத்து சட்டத்தின் கீழ், விசாரணைக்கு உதவும் பொருட்டு, லாரி நிறுவன நடத்துனர் அழைக்கப்பட்டிருப்பதாக மலாக்கா ஜேபிஜே இயக்குநர், முஹமட் ஃபிர்தாவுஸ் ஷாரிஃப் தெரிவித்தார்.

''தற்போதைக்கு நாம் இன்னும் விசாரித்து வருகிறோம். அந்த லாரி நிறுவன நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்போம். இதுவரையில் எனக்கு எந்தவொரு அண்மைய தகவல்களும் கிடைக்கவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞரின் முடிவிற்கு நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், '' என்றார் அவர்.

முன்னதாக, அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம், குடிநுழைவுத் துறை மற்றும் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம்,ஏடிகேகேவுடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு தலைமையேற்றப் பின்னர், முஹமட் ஃபிர்தாவுஸ் அத்தகவல்களைக் கூறினார்.

27 பயணிகளை ஏற்றி வந்த பேருந்து, இரண்டு லாரிகள் மற்றும் இரண்டு கார்கள் ஆகிய ஐந்து வாகனங்களை உட்டுத்திய அக்கோர விபத்தில் எழுவர் பலியாகியதோடு 33 பேர் காயமடைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)