கோலா நெருஸ், 22 ஜனவரி (பெர்னாமா) -- பகுதிநேர வேலை செய்ய விரும்பும் ஆசிரியர்கள், முன்னதாகவே அதற்கான அனுமதியை கல்வி அமைச்சிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
இந்த விவகாரம் குறித்த தெளிவான வழிகாட்டுதலை தங்கள் தரப்பு அமைத்து விட்டதாக, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கூறினார்.
"அவர்கள் எந்த வேலையை செய்தாலும் அது அவர்கள் அடிப்படை வேலைக்கு ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அதோடு அவர்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இணையம் வழி பொருட்களை வியாபாரம் செய்யும் வேலை செய்தாலும் அதற்கான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், அதனை தங்களின் அடிப்படை வேலை நேரத்தில் செய்யக் கூடாது. எனவே, நடப்பில் உள்ள கற்றல் கற்பித்தலில் முதலில் கவனம் செலுத்தும்படி நான் அறிவுறுத்துகின்றேன். இது நாட்டின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கான நம்முடைய உறுதிப்பாடாகும். வகுப்பறையில் குறிப்பாக, கற்றல் கற்பித்தலில் கவனம் செலுத்தும் ஆசிரியர்களே எங்களுக்குத் தேவை, " என்றார் அவர்.
அதிகமான கல்வித்துறை அதிகாரிகள், பகுதி நேரமாக வேலை செய்வது குறித்து கருத்துரைக்கையில் ஃபட்லினா அதனை கூறினார்.
இதனிடையே, ஆசிரியர்களின் பணி மாற்றம் சார்ந்த விவகாரங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பிறகே அதற்கான நடவடிக்கைகள் விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)