துருக்கி, 22 ஜனவரி (பெர்னாமா) -- துருக்கியின் வடமேற்கு போலு மாகாணத்தில் உள்ள துர்கியேவின் கர்தல்காயா ஸ்கை ரிசார்ட் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்திருப்பதை, அந்நாட்டின் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியது.
கிழக்கு இஸ்தான்புலுக்கு சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில், கோரோக்லு மலைகளில் உள்ள 12 மாடி கட்டிடம் கொண்ட கர்தல்காயவின் பிரபலமான ஸ்கை ரிசார்ட் தங்கும் விடுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:27 மணிக்கு தீச்சம்பவம் ஏற்பட்டது.
விடுமுறை காலத்தை முன்னிட்டு அவ்விடுதியில் சுமார் 238 பேர் தங்கியிருந்தனர்.
நான்காவது மாடியில் உள்ள உணவகப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து, பின்னர் மேல் தளங்களுக்குப் பரவியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வேகமாக பரவிய தீயிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக விடுதியில் தங்கியிருந்தவர்கள் சிலர் தங்களின் படுக்கை விரிப்புகளைக் கயிற்றுகளில் கட்டி தப்பிக்க முயற்சித்தனர்.
மேலும், போலு மாகாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள், அவசரகால மீட்பு குழுவினர், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர், தீயும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று அந்நாட்டில் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அதன் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அறிவித்தார்.
இதனிடையே, 76 பேரை பலி கொண்டு 51 பேர் காயமடைய காரணமான, துருக்கி, போலு, கர்தல்கயா ஸ்கை ரிசார்ட்டில் உள்ள கிராண்ட் கர்த்தல் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
இது குறித்த தொடர் தகவல்களை பெறும் பொருட்டு அங்காராவில் உள்ள தூதரகம் மற்றும் இஸ்தான்புலில் உள்ள துணைத் தூதரகத்தை அணுக்கமாக நாடி வருவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹாசான் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
துருக்கி குடியரசின் அரசாங்கம், மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மலேசிய அரசாங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக விஸ்மா புத்ரா குறிப்பிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)