சிறப்புச் செய்தி

சுகாதாரம் கருதி நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வீர்- பி.ப.ச

30/01/2025 08:37 PM

கோலாலம்பூர், 30 ஜனவரி (பெர்னாமா) -- நெகிழியின் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பல தரப்பினர் எச்சரிக்கை விடுத்தாலும் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு அதன் தேவைகள் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளன.

நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளாவிடில் மிகப்பெரிய இயற்கை தூய்மைகேடு எதிர்கொள்ள நேரிடும்.

அதோடு, மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் மக்கள் அது குறித்த விழிப்புணர்வை கொண்டிருக்கப்பது மிகவும் அவசியம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

உலகளவில் நெகிழிப் பயன்பாட்டினால் தொடர்ந்து ஆபத்துகள் நீடித்துக் கொண்டே வருகின்றன.

அதிலும் குறிப்பாக, கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்படுவதன் வழி, மனிதகுலமும் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்கின்றது.

நெகிழிப் பயன்பாடு குறித்து அண்மையில் கொரியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பயனீட்டாளர் சங்கங்கள் இத்தகவல்களை வழங்கியிருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு மற்றும் கல்வி பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் விளக்கினார்.

''கடல்வாழ் உயிரினங்களான மீன், இறால் மற்றும் நண்களில் நுண்ணுயிர் நெகிழிகள் அதிகமாக இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மனிதர்களின் இரத்தத்திலும் இந்த நுண்ணுயிர் நெகிழிகள் அதிகமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் நெகிழிகள் அதிகமாக உள்ளன,'' என்றார் அவர்.

உணவு, நீர் உட்பட பெரும்பாலான உணவு வகைகள் நெகிழிப் பைகளில் பொட்டலமிடப்படுகின்றன.

நெகிழிப் பைகளில் பொட்டலமிடப்படும் சூடான உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகளையும் சுப்பாராவ் விளக்குகின்றார்.

''சூடான உணவுகளை நாம் அதில் போடக் கூடாது. அவ்வாறு செய்தால் அந்த நெகிழியில் இருக்கின்ற அமிலங்கள் உணவோடு சேர வாய்ப்பு உள்ளது. மலேசிய சுகாதார அமைச்சின் ஆய்வின் படி, நிறைய இளைஞர்கள் ஆண்மை குறைப்பாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம், அவர்கள் உண்ணும் உணவுகள். அதில் முக்கியமானது நெகிழிதான்,'' என்றார் அவர்.

இதனிடையே, இந்தியா போன்ற பல நாடுகள் நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதித்திருக்கின்றன.

ஆனால், மலேசியாவில் அத்தடை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

மேலும், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைககளினால் மண் உள்ளே இருக்கும் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படும் என்பதால் அதனை முற்றாக தவிர்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

''மலேசியாவில் mulching என்று சொல்லக்கூடிய மூடாவிற்கு அட்டைகள், தாள்தான் வைக்க வேண்டும் தவி நெகிழிகளைப் பயன்படுத்தக் கூடாது. நெகிழிப் பைகள் பெரியதாக இருக்கும் அதனை மூடிவிடுவர்கள். அவ்வாறு மூடும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. நெகிழியால் ஆன பொருட்கள் மக்காது,'' என்றார் அவர்.

இயற்க்கையின் பாதுகாப்பு மற்றும் மக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கூடுமானவரை நெகிழிகளின் பயன்பாட்டினை குறைத்து கொள்ளுமாறு சுப்பாராவ் பயனீட்டாளர்களைக் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)