பொது

மதம் தொடர்பான அறிக்கைகள் வெளியிடுவதில் கவனமுடன் செயல்பட வேண்டும்

01/02/2025 06:03 PM

புத்ராஜெயா, 01 பிப்ரவரி (பெர்னாமா) -- மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தாத வகையில், மதம் தொடர்பான கூற்றுகளை வெளியிடுவதில் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கவனமாக செயல்பட வேண்டும்.

ஒருவரை ஒருவர் மதிக்கும் குணம் தொடர்ந்து பின்பற்றப்படுவதோடு, பல்வேறு இனம் மற்றும் மதம் கொண்ட மலேசியர்களின் ஒற்றுமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று மத விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முஹமட் நயிம் மொக்தார் கூறினார்.

"நாம் வெளியிடும் ஒவ்வொரு கூற்றும் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும் என்பது என்னுடைய அறிவுரை. இந்த அறிவுரையைக் குறிப்பாக நான் எனக்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் வெளியிடும் ஒவ்வொரு கூற்றும் கவனமாக இருக்க வேண்டும். இஸ்லாமிலும் நான் அறிவுரைப் பிரச்சனையைப் பார்க்கிறேன். ஏனெனில், ஒருவருக்கொருவர் அறிவுரை கூறும் கருத்து இஸ்லாம் சமயத்தில் உண்மையில் ஊக்குவிக்கப்படுகிறது," என்றார் அவர்.

நேற்றிரவு, புத்ராஜெயாவில், 2025-ஆம் ஆண்டிற்கான கூட்டரசு தினத்தை முன்னிட்டு, மடானியின் 'Zikir Akbar' நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, இஸ்லாம் தொடர்பான விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அம்னோ உலாமா மன்றம், அமைச்சர்கள், குறிப்பாக, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் அதனை கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)