பொது

எல்லை கட்டுப்பாடு & பாதுகாப்பு நிறுவனத்தை அரசாங்கம் தொடங்கியது

02/02/2025 05:25 PM

சிப்பாங், 02 பிப்ரவரி (பெர்னாமா) --   நாட்டின் எல்லைகளில் செயல்படும் ஒரே நிறுவனமாக ஏ.கே.பி.எஸ் எனப்படும் எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தை அரசாங்கம் தொடங்கியது.

சுமூகமான மற்றும் திறமையான எல்லைக் கட்டுப்பாட்டு செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான மடானி அரசாங்கத்தின் உறுதியை ஏ.கே.பி.எஸ் புலப்படுத்துவதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.

நாடு முழுவதும் விமான நிலையங்கள், தரை எல்லைகள் மற்றும் துறைமுகங்களின் நுழைவாயிலில் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க பல்வேறு அரசாங்க துறைகளின் நிபுணத்துவத்தையும் வளங்களையும் ஏ.கே.பி.எஸ் ஒருங்கிணைப்பதாக அனைத்துலக நுழைவாயில் எல்லை நெரிசல் செயற்குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் கூறுகின்றார்.

“ஏ.கே.பி.எஸ்-ஐ அமைப்பது சாதாரண நடவடிக்கை அல்ல. அரசாங்கத்தின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களுக்கு பொதுச் சேவை துறை அதிகாரிகளின் “பணிவு” மற்றும் “விஸ்வாசம்” ஆகிய மதிப்புகளுக்கு இது இரு சவால். ஒவ்வொரு நிறுவனமும் அமைச்சும் முன்னோக்கிச் செல்ல நாட்டின் நுழைவாயிலில் சேவைகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தை உருவாக்குகின்றது”, என்று அவர் கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, ஏ.கே.பி.எஸ் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் வழி, கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் SBA எனப்படும் ஒரே தேசிய எல்லை நிறுவனக் குழுவை உருவாக்க வழிவகுத்ததாக அவர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு ஆசியானுக்கு மலேசியா தலைமையேற்றிருக்கும் வேளையில், ஏ.கே.பி.எஸ்-இன் அவசியத்தை அங்கீகரிக்கும் வகையில் அதன் அறிமுகம் அமைந்துள்ளதை ஃபடில்லா சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)