பத்துமலை, 02 பிப்ரவரி (பெர்னாமா) -- தைப்பூசத்திற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் எஞ்சியிருக்கும் நிலையில், பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களின் கூட்டம் இன்று அதிகமாகக் காணப்பட்டது.
கூட்ட நெரிசல், விடுப்பு கிடைக்காதது, வீட்டில் இருக்கும் முதியவர்கள் மற்றும் குழைந்தைகளின் வசதி ஆகியவற்றை முன்னிறுத்தி, வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்தி தைப்பூசத்திற்கான நேர்த்திக்கடன்களை முன்கூட்டியே பக்தர்கள் செலுத்தத் தொடங்கி விட்டது பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.
"அதிக கூட்டமாக இருக்கும். வயதானவர்கள் மற்றும் சிறுப் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவ்வளவு சுலபமாக மேலே ஏறிவிட முடியாது. அதனால்தான் முன்னதாகவே நேர்த்திக் கடன்களைச் செலுத்தி விட்டோம். தைப்பூசத்தின் போது ஆலயத்தில் வருவோம். வந்து முருகனை தரிசனம் செய்து விட்டு செல்வோம்", என்றார் கோகுலன் ராஜ்.
"வாகன நெரிசல், வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் மிகவும் தூரத்தில் நிறுத்தி விட்டு நடந்து வருவது, கூட்ட நெரிசல் போன்ற காரணங்களுக்காக நான் முன்னதாகவே நேர்த்திக் கடன்களைச் செய்து விடுவோம். தைப்பூச தினத்தன்று நாங்கள் வந்து காவடிகளை மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருப்போம். காலையில் வருவோம், ஆனால் விடிந்துதான் வீடு திரும்புவோம்", என்று பரமேஸ்வரி கூறினார்.
பக்தர்களைக் கடந்து, சுற்றுப் பயணிகளின் வருகையும் பத்துமலை திருத்தலத்தில் அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது.
"பல்வேறு பாரம்பரியத்தைக் காண எங்களுக்குப் பிடித்திருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் காணவும் எங்களுக்கு விருப்பம்", என்றார் வெளிநாட்டைச் சேர்ந்த லிடியா.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)