ஜார்ஜ்டவுன், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் பினாங்கில் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தைப்பூசத் திருவிழா சுமுகமாக நடைபெறுவதை உறுதிச் செய்யும் பொருட்டு, அதன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக LWHPP எனப்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்தார்.
''ஒற்றுமையாக இந்த தைப்பூசத்தை மறுபடியும் இரண்டாவது வருடமாக கொண்டாடப் போகின்றோம். இது ஒரு முக்கியமான விழா. கடந்த ஆண்டு பத்து லட்சம் பக்தர்கள் திரண்டதாக பதிவு செய்துள்ளோம். டிக்கெட் விற்பனையில் தெரிய வந்தது. இந்த வருடம் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்,'' என்று ராயர் கூறினார்.
சனிக்கிழை பினாங்கு, ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு தைப்பூச கொண்டாட்டம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் ராயர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, பினாங்கு இலக்கவியல் தரப்பின் ஒத்துழைப்புடன் ஏற்படுத்தப்பட்ட செயலியின் வழி, தங்க ரதம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் இலக்கவியல் கருவியை LWHPP தயார் செய்திருப்பதாக ராயர் தெரிவித்தார்.
இதன் வழி, பக்தர்கள் ரதம் இருக்கும் இடம் மற்றும் அதன் பயணத்தை தெரிந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இலக்கவியல் கருவி, தற்போது கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
'Pathrikai & Chariot Tracker' எனும் செயலி வழி இது பற்றிய தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம் என்று அவர் விளக்கினார்.
''எல்லோருமே இந்தக் கருவியைப் பயன்படுத்தி தங்க இரதத்தின் ஊர்வலம் அவ்வப்போது எங்கே இருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். முக்கியமான நோக்கம் என்னவென்றால், தைப்பூச திருநாளில் வாகன நெரிசல்கள் அதிகமாக இருக்கும். பக்தர்கள் திரளாக வருவார்கள். உங்களுக்கு இந்தக் கருவியை ஏற்பாடு செய்து முக்கியமாக பூஜை செய்யும் போது குறிப்பாக தங்க இரதத்தை வழிப்படும் போது, அது எங்கே இருக்கின்றது என்று நீங்கள் தெரிந்துக் கொள்வதற்கு இந்தக் கருவியை நாங்கள் தயார் செய்திருக்கின்றோம்.'' என்றார் அவர்.
பிப்ரவரி 10ஆம் தேதி காலை மணி ஆறுக்கு லெபோ குவினில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தங்க ரதம் புறப்பட்டு மறுநாள் ஶ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தை சென்றடையும்.
அதனை அடுத்து, பிப்ரவரி 12ஆம் தேதி அங்கிருந்து மீண்டும் புறப்படும் தங்க இரதம் மறுநாள் மகா மாரியம்மன் ஆலயத்தை சென்றடையும் என்று ராயர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)