ஈப்போ, 10 பிப்ரவரி (பெர்னாமா) - ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இரத ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை புந்தோங் சுங்கை பாரி வழியில் உள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து பெரும் திரளான பக்தர்கள் புடை சூழ புறப்பட்ட முருகப் பெருமான் குனோங் செரோ கல்லுமலை ஆலயத்தை வந்தடைந்தார்.
காலை மணி 6-க்கு புறப்பட்ட இரதம், காலை மணி 11-க்கு வந்தடைந்ததாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் செயலாளர் வி.மு. தியாகராஜன் கூறினார்.
சுங்கை பாரியில் இருந்து புறப்பட்டு ஜாலான் துன் ரசாக், ஜாலான் லகாட், ஜாலான் சுல்தான் யூசோப் வழியாக இரதம் கல்லுமலை ஆலயத்தை வந்தடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இரத ஊர்வலத்தின் போது வழி நெடுகிலும் மக்கள் காத்திருந்து அரச்சனைகள் செய்தும் பால் குடம் ஏந்தியும் தேங்காய்கள் உடைத்தும் தங்களின் காணிக்கையை செலுத்தினர்.
இதனிடையே, இரத ஊர்வலம் தொடங்கி தைப்பூசத்திற்கு அடுத்த தினம் வரை ஆலயத்தில் சில தரப்பினர் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, தைப்பூச மறுநாள் மாலை மணி 4 அளவில் இரதம் மீண்டும் கல்லுமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மகா மாரியம்மன் ஆலயத்தை வந்தடையும் என்றும் தியாகராஜன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)