விளையாட்டு

பிஏஎம்டிசி பூப்பந்து போட்டி: முதல் ஆட்டத்தில் மலேசியா தோல்வி

12/02/2025 05:47 PM

கிங்டாவ், 12 பிப்ரவரி (பெர்னாமா) -- சீனா, கிங்டாவில் நடைபெறும் பிஏம்டிசி (BAMTC) எனும் ஆசிய கலப்பு அணி பூப்பந்து போட்டியில் பி குழுவில் இடம் பெற்றிருக்கும் மலேசியா, 2-3 என்று முதல் ஆட்டத்தில் ஹோங் கோங்கிடம் தோல்வி கண்டுள்ளது. 

முதல் ஆட்டத்தில் களமிறங்கிய நாட்டின் கலப்பு இரட்டையர்களான ஹோ பாங் ரோன் - செங் சு யின் (Hoo Pang Ron-Cheng Su Yin) ஜோடி, ஹோங் கோங்கின் தாங் சுன் மன் -ங் சி யாவ் (Tang Chun Man-Ng Tsz Yau) இணையரிடம் 21-17, 17-21, 11-21 என்ற நிலையில் தோல்வி கண்டது. 

அதனைத் தொடர்ந்து விளையாடிய நாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டக்காரர் கே.லெட்சனா 21-18 மற்றும் 21-18 என்று சலோனி சமிர்பாய் மேத்தாவை (Saloni Samirbhai Mehta) நேரடி செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய ஜஸ்டின் ஹோ (Justin Hoh) 19-21, 16-21 எனும் நேரடி செட்களில் லீ செக் யூவிடம் (Lee Cheuk Yiu) தோல்வியடைந்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவில், மலேசியாவை மீண்டும் சமன் செய்ய முயற்சித்த கோ பெய் கீ - தியோ மெய் சிங் (Go Pei Kee-Teoh Mei Xing) இணையரின் ஆசை நிறைவேறாமல் போனது. 

அந்த இணை 17-21, 14-21 என்று நேரடி செட்களில் வீழ்ந்தது. 

இறுதியாக, ஆடவர் இரட்டையர் பிரிவில், மான் வெய் சொங் - தீ காய் வுன் (Man Wei Chong-Tee Kai Wun) ஜோடியின் வழி மலேசியா வெற்றி பெற்றாலும், 2-3 எனும் புள்ளிகளோடு தற்போது பி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 

முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறுகின்றன. 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)