கோலாலம்பூர், 14 பிப்ரவரி (பெர்னாமா) - இவ்வாண்டு இறுதியில் 'SNAP ELECTION' எனும் திடீர் பொதுத் தேர்தல் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஆருடம் தெரிவித்திருக்கும் பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ முஹமட் அஸ்மின் அலிக்கு மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் வாழ்த்து கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதலுடன் பிரதமரின் சிறப்பு அதிகாரத்திற்கு உட்பட்டது என்று டான் ஸ்ரீ ஜோஹாரி விளக்கினார்.
"அஸ்மின் அந்த கூற்றை வெளியிடுவது அவருடைய திட்டமாக இருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால் உண்மை என்னவென்றால் அது அவ்வளவு எளிதல்ல,'' என்றார் அவர்.
அனைத்து மாநிலங்களிலும், குறிப்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் முக்கியத்துவம் வழங்கும்படி பெர்சத்து தலைவர் Tan Sri Muhyiddin Yassin உத்தரவு பிறப்பித்ததாக முன்னதாக அஸ்மின் அலி தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய வடிவமைப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் அது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், டான் ஶ்ரீ ஜொஹாரி தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)