பொது

மதம் சார்ந்த கருத்துகளைப் பேசுவதில் கவனம் தேவை

15/02/2025 03:51 PM

கோலாலம்பூர், 15 பிப்ரவரி (பெர்னாமா) --   பேச்சு சுதந்திரம் என்பது மற்றவர்களின் நம்பிக்கைகளை அவமதிக்கவோ அல்லது குறைத்து மதிப்பிடவோ ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதால் மதம் சார்ந்த கருத்துகளைப் பேசுவதில் அனைத்து தரப்பினர்களும் கவனமுடன் இருக்கும்படி நினைவுறுத்தப்படுகின்றது.

மதம் தொடர்பான போலி தகவல்களையும், கோபத்தைத் தூண்டும் கூற்றுகளையும் வெளியிடுவது, நிலைமையை மோசமாக்குவதோடு, நாட்டில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் Datuk Aaron Ago Dagang எடுத்துரைத்தார்.

“பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், பல்வேறு அம்சங்களில் வேறுபாடுகள் நிகழ்வதை நாம் மறுக்க முடியாது. இருப்பினும், இந்த வேற்றுமையை நாம் பலமாக பார்க்க வேண்டும், பலவீனமாக அல்ல. இந்த பன்முகத்தன்மை பிரிவாக மாறிவிடக் கூடாது. மாறாக, ஒருவரை ஒருவர் மதிக்கும் சமூகத்தின் அடையாளமாக இருக்க வேண்டும்”, என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில், உலக மதங்களுக்கு இடையிலான நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட Jejak Harmoni நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், அவர் அவ்வாறு கூறினார்.

மதம் மற்றும் இனம் தொடர்பான விவாதங்களில் பக்குவமான அணுகுமுறையையும், சிறந்த நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு வித்திடும் பேச்சு சுதந்திரத்தையும் கடைப்பிடிக்கும்படி, Aaron மக்களைக் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)