கோலாலம்பூர், 15 பிப்ரவரி (பெர்னாமா) -- பிப்ரவரி 11-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே.என், எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை முறியடித்துள்ளது.
மேலும், இந்நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டதுடன் 2 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் ஜே.எஸ்.ஜே.என் இயக்குநர் டத்தோ ஶ்ரீ காவ் கொக் சின் தெரிவித்தார்.
காலை மணி 11.20 அளவில் பண்டார் ஶ்ரீ டமான்சாராவில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில், 41 முதல் 58 வயதுடைய மூன்று உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக டத்தோ ஶ்ரீ காவ் கொக் சின் கூறினார்.
அவ்வீட்டின் இரண்டாவது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஷாபு வகை போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் பொட்டலமும், கெதாமின் வகை போதைப்பொருள் என்று சந்தேகிக்கப்படும் பொட்டலமும் கண்டுடெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், காவ் அவ்வாறு கூறினார்.
Mercedes Benz E240, BMW 523i மற்றும் Honda City ரகத்திலான மூன்று கார்கள் உட்பட 23 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணமும் Rolex ரக கைக்கடிகாரமும் பறிமுதல் செய்யப்பட்டன.
உள்நாடு மற்றும் அனைத்துலக சந்தைகளுக்கு போதைப்பொருள்களைச் சேமித்து அதை விநியோகிப்பதற்காக, அந்த மூன்று ஆடவர்களும் மாதம் 10,000 முதல் 50,000 ரிங்கிட் வரை ஊதியம் பெற்றதாக காவ் கூறினார்.
இவ்வழக்கு அபாயகர போதைப்பொருள் சட்டம் செக்ஷன் 39பி-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)