உலகம்

F-35 விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது குறித்த பேச்சு வார்த்தை அரசாங்க அளவில் மேற்கொள்ளப்படும்

15/02/2025 04:59 PM

பெங்களூர், 15 பிப்ரவரி (பெர்னாமா) -- 2025ஆம் ஆண்டு தொடங்கி இந்திய இராணுவப் படையின் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுக்கான விற்பனையை அமெரிக்கா அதிகரிக்கும் என்றும், F-35 போர் விமானங்களை வழங்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, F-35 விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வது குறித்த எந்தவொரு பேச்சு வார்த்தையும் அரசாங்க அளவில் மேற்கொள்ளப்படும் என்று அவ்விமானங்களைத் தயாரிக்கும் லோக்ஹீட் மார்டின் தெரிவித்துள்ளது.

F-35 போன்ற வெளிநாட்டு இராணுவ தளவாட விற்பனை, அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களாகக் கருதப்படுகின்றன.

அங்கு பெந்தகன், தற்காப்பு குத்தகையாளருக்கும் வெளிநாட்டு அரசாங்கத்திற்கும் இடைநிலையாக செயல்படுகிறது.

2008-ஆம் ஆண்டு முதல், 2,000 கோடி டாலருக்கும் அதிகமான அமெரிக்க தற்காப்பு பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கலந்துரையாடலுக்குப் பிறகு, கடந்தாண்டில், 31 MQ-9B சீகார்டியன் மற்றும் ஸ்கைகார்டியன் ஆளில்லா விமானங்களை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது.

உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளரான இந்தியாவிற்கு, ரஷ்யா பல ஆண்டுகளாக முக்கிய ஆயுத விநியோக்கிப்பாளராக இருந்து வருகிறது.

ஆனால், அண்மைய காலமாக, உக்ரேனில் நீடித்து வரும் போரினால் மோஸ்கோவின் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் புது டெல்லியின் கவனம் மேற்கத்திய நாடுகள் பக்கம் திரும்பியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)