கோலாலம்பூர், 18 பிப்ரவரி (பெர்னாமா) - நாட்டில் இனப்பிரச்சனைகளைத் தடுக்க இனப் பாகுபாடு தடுப்புச் சட்டம் போன்ற புதிய சட்டங்களை இயற்றவோ அல்லது அறிமுகப்படுத்தவோ தற்போது அவசியமில்லை என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு கருதுகிறது.
தற்போதுள்ள சட்டங்கள் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பேணுவதற்குப் போதுமானது.
அதோடு, நடப்பிலுள்ள சட்ட அமலாக்கத்தை மேம்படுத்தினால் போதும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் எடுத்துரைத்தார்.
"இது தொடர்பில், இன, மதம் மற்றும் சமூக வேறுபாடின்றி நல்லிணக்கம் பேணப்படுவதை உறுதி செய்வதற்கு வெளிப்படையான மற்றும் நியாயமான அமலாக்கம் மிகவும் முக்கியமானது. இருப்பினும், தேவையான மற்றும் சில உரைகள் அல்லது அறிக்கைகள் (வெறுக்கத்தக்க பேச்சு) அல்லது ஆத்திரமூட்டும் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக தற்போதைய சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கருதினால், அமைச்சு அந்த முயற்சியை ஆதரிக்கும்," என்றார் அவர்.
அதிகரித்து வரும் இனவெறி சம்பவங்களைக் கட்டுப்படுத்தி, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டத்தை இயற்ற அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதா என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஏரன் அகோ டாகாங் அவ்வாறு பதிலளித்தார்.
1984-ஆம் ஆண்டு அச்சு மற்றும் வெளியீடு சட்டம், 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1948 நிந்தனைச் சட்டம் என்று இனப் பிரச்சனைகளைத் தடுக்க தற்போது 10 சட்ட விதிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)