உலகம்

மத்தியப் பிரதேசத்தில் கல்விக்கு விண்ணப்பிக்க சிறந்த இணைய சேவை அவசியம்

18/02/2025 06:28 PM

இந்தியா, 18 பிப்ரவரி (பெர்னாமா) - இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படிப்பதற்கு அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கும் உதவிகளுக்கு விண்ணப்பிக்க மற்றும் விவசாயத்திற்கு சிறந்த இணைய சேவை அவசியம் என்று அங்குள்ள மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மோசமான இணையச் சேவை காரணமாக மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளுக்கு வெளியே இயங்கலை வழியான வகுப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு, நிலையற்ற இணையச் சேவை காரணமாக அரசாங்கக் கொள்கைகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை என்று விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

"இணையச் சேவை இங்கே இருக்கிறது. ஆனால், சில நேரங்களில் அச்சேவையில் துண்டிப்பு ஏற்பட்டு விடும். முக்கியமான பணிகளைச் செய்வது கடினம். உதாரணமாக, விவசாயிகள் நன்மைகளைப் பெற விரும்பினாலோ அல்லது இணையம் மூலம் தகவல்களைப் பெற விரும்பினாலோ சில நேரங்களில் எங்களுக்கு அதைப் பெற முடியாது. படிப்பு, வங்கி வேலை போன்ற பிள்ளைகள் தொடர்பான விஷயங்களை செய்து முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது," என்று / கெகாரியா கிராமத்தைச் சேர்ந்த ராம் சிங் தெரிவித்தார்.  

"கிராமங்களிலும் சிறந்த வசதிகள் இருக்க வேண்டும். இதன்வழி பிள்ளைகள் (இணையச் சேவைக்காக) வெளியே உட்கார வேண்டிய அவசியமில்லை. அவர்கள் (அவர்களின் வீட்டிற்குள்) உட்கார்ந்து வேலை செய்ய முடியும். இன்றைய இளைஞர்கள் (கைத்தொலைபேசியில்) படிக்கிறார்கள். இன்றைய பெரும்பாலான வேலைகள் கைத்தொலைபேசியில் செய்யப்படுகின்றன. அரசாங்கமும் மாணவர்கள் கைத்தொலைபேசியில் படிக்க ஊக்குவிக்கிறது," என்று மற்றொரு கிராமவசியான கியான் சிங் பாகல் என்பவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பெரிய நகரங்களில் கூட, பொதுப் போக்குவரத்தில் இணையச் சேவை நம்பகத்தன்மையற்ற நிலையில் இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் தற்போது 10 கோடிக்கும் அதிகமானோர் இணையச் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், அந்நாட்டின் கிராமப்புற பகுதிகளில், சுமார் 38 விழுக்காட்டினர் மட்டுமே இணையச் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வாஷிங்டனில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கை சந்தித்து விண்வெளி, இயக்கம், தொழில்நுட்பம் மற்றும் புதுமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)