சிறப்புச் செய்தி

பக்கவாதத்தின் விளக்கங்களும் விழிப்புணர்வும்

19/02/2025 08:22 PM

கோலாலம்பூர், 19 பிப்ரவரி (பெர்னாமா) -- ஒருவருக்கு முறையான ரத்த ஓட்டம் இல்லாததால் மூளையில் உள்ள உயிரணுக்கள் செயல் இழந்து stroke எனப்படும் பக்கவாதம் ஏற்படுகிறது.

உலகளவில், 25 வயதிற்கு மேற்பட்ட நால்வரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் நிலையில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் அதனால் பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஏறத்தாழ 65 லட்சம் பேர் மரணமடைவதாக உலக பக்கவாத அமைப்பு, WSO-வின் தரவு கூறுகின்றது. 

மரணத்தை விளைவிக்கக்கூடிய மாரடைப்பிற்கு மக்களிடையே உள்ள விழிப்புநிலை, அதே விளைவை அளிக்கக்கூடிய பக்கவாதத்திற்கு இல்லை என்கிறார் குடும்பநல மருத்துவர் டாக்டர் கோகிலவாணி சேகர் சந்திரன். 

''மூளைக்குச் செல்கிற ரத்தக் குழாயில் அடைப்பு அல்லது அந்த ரத்தக் குழாய் வெடித்தாலோ பக்கவாதம் ஏற்படும். நம் அசைவு, பேச்சு, பார்வை, குணநலன், செயல்பாடு என அனைத்துமே இந்த மூளையில்தான் உள்ளது. எனவே, எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்பகுதியில் அதன் அறிகுறிகள் தென்படும்,'' என்றார் அவர். 

பக்கவாதம் என்பது உடலின் ஒரு பக்க செயலிழப்பு என்றாலும், பாதிக்கப்படும் உடல் உறுப்புகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்று டாக்டர் கோகிலவாணி விவரித்தார். 

பக்கவாதத்தின் அறிகுறிகள் குறித்தும் அவர் இவ்வாறு விளக்குகின்றார்.

''முகத்தில் பாதிப்பு, கை கால் பலவீனமடைதல், வார்த்தையில் உளறல் போன்ற அறிகுறிகள் தென்படும். இவ்வாறு ஏற்படும் பட்சத்தில் நீங்கள் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்,'' என்றார் அவர்.

ஆக்சிஜன் எனப்படும் பிராணவாயு மூளைக்கு முழுமையாக செல்லாததனால், ஒரே நிமிடத்தில் 90,000 நரம்பியல் உயிரணுக்கள் இறக்கக்கூடும் சாத்தியம் உள்ளதை டாக்டர் கோகிலவாணி சுட்டிக்காட்டினார்.

எனவே, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறிய அவர், தாமதமாகும் பட்சத்தில் அதனை குணப்படுத்துவதும் எளிமையான ஒன்றல்ல எனவும் குறிப்பிட்டார். 

ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் டாக்டர் கோகிலவாணி தெளிவுப்படுத்தினார்.

BE FAST எனும் உக்தியை கையாள வேண்டும். அதாவது, B-Balance (சமநிலை), E-Eyes (பார்வை), F-Face (முகத் தசையில் மாற்றம்), A-Arms (கை தசையில் மாற்றம்), S-Speech (பேச்சில் உளறல்), T-Time (நேரத்தோடு சிகிச்சை) எனும் உக்தி பயன்படுத்தப்பட வேண்டும்,'' என்றார் அவர். 

இளைஞர்களையும் தாக்கும் இந்நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய கோளாறு போன்ற உபாதைகள் உடையவர்களையும் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அவர் மேலும் கூறினார். 

எனவே, பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்பதையும் டாக்டர் கோகிலவாணி வலியுறுத்தினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]