கோலாலம்பூர், 20 பிப்ரவரி (பெர்னாமா) -- ஆசியான் படைப்பாக்க பொருளாதார நிலைத்தன்மை கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான ஆசியான்-பிரிட்டன் கருத்தரங்கு இவ்வட்டாரத்தின் கலாச்சார மற்றும் படைப்பாக்கத் தொழில்துறையை முன்னேற்றுவதற்கான ஒரு முக்கிய தளமாக செயல்படுவதோடு ஆசியான் படைப்பாக்கப் பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
பகிரப்பட்ட தூரநோக்கு மற்றும் வியூகத் திசைகளை கோடிட்டுக் காட்டும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதை இக்கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துணை அமைச்சர் கைருல் ஃபிர்டாவுஸ் அக்பார் கான் கூறினார்.
இக்கருத்தரங்கு, ஆசியான் மற்றும் பிரிட்டன் இடையே படைப்பாக்க பொருளாதாரம் குறித்த அறிவுப் பகிர்வு மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான ஒரு தளமாகவும் செயல்படும்.
அதோடு, கொள்கை வகுப்பாளர்களும் பங்குதாரர்களும் சாத்தியமான வாய்ப்புகளை ஆராய்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அது வழிவகுக்கும் என்று கைருல் ஃபிர்டாவுஸ் தெரிவித்தார்.
இன்று, கோலாலம்பூரில் ஆசியான் கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் வட்டார படைப்பாக்க பொருளாதாரத்திற்குள் கலாச்சாரம் மற்றும் படைப்பாக்கத் தொழில்துறைகள் குறித்து விவாதிக்க 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கின் தொடக்க விழாவில் வரவேற்புரையாற்றிய கைருல் ஃபிர்டாவுஸ் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]