BRIEF-I கீழ் இந்திய தொழில்முனைவோருக்காக 10 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு

25/02/2025 08:31 PM

கோலாலம்பூர் , 25 பிப்ரவரி (பெர்னாமா) --  BRIEF-i எனப்படும் பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் கீழ், இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்காக பிரேத்தியேகமாக வழங்கப்பட்டிருந்த ஒதுக்கீடு, 10 கோடி ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதற்கு இந்நிதி பயனளிக்கும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த ஆண்டு BRIEF-i திட்டத்தின் கீழ் குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்காக ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இன்று கூடுதலாக மேலும் ஐந்து கோடி ரிங்கிட் நிதியை பேங்க் ரக்யாட் ஒதுக்கீடு செய்திருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை இந்திய தொழில்முனைவோர் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

''நமக்கு தெரிகிறது. நாம் பார்த்துவிட்டோம். நமது சமுதாயத்திற்கு இது மிகவும் அவசியம் என்று. ஏனென்றால், இங்கு கடனுதவியைப் பெற்று தங்களது வர்த்தகத்தை பெரிய அளவிற்கு கொண்டுச் செல்கின்றனர். காசோலையைப் பெற்ற சிலரிடம் பேசும் போது அவர்களும் இன்னும் அதிகமாக கேட்கின்றனர். ஏனென்றால், இந்த நிதி குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு 1700 விண்ணப்பங்கள் கிடைத்தது. ஆனால், 512 விண்ணப்பங்கள்தான் அங்கீகரிக்கப்பட்டது,'' என்றார் அவர்.

மேலும், வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஹலால் சான்றிதழலைப் பெறுவதற்கும் பேர்ங் ரக்யாட் மூலம் ஆலோசனை மற்றும் வழிக்காட்டுதல்களும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

''இப்போது நீங்கள் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்யுங்கள். அனுமதி கிடைத்தவுடன் அவர்களே உங்களை அழைத்து பயிற்சி மற்றும் விளக்கம் கொடுத்தப் பின்னர், நீங்கள் JAKIM-இல் பணம் செலுத்தலாம். உங்களுக்கு சான்றிதழ் கிடைக்கும்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் உள்ள பேர்ங் ரக்யாட்டில் இந்திய தொழில்முனைவோர்களுக்கு மாதிரி காசோலையை வழங்கியப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் மாதிரி காசோலையை பெற்றுக் கொண்ட தொழில்முனைவோர் சிலர் தங்களின் மகிழ்ச்சியைப் பெர்னாமா செய்திகளோடு பகிர்ந்து கொண்டனர்.

''இந்த நிதி முதலீடுகளுக்கு உதவும். வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். அதோடு, விண்ணப்பம் செய்வதிலும் சீரான செயல்முறையை கையாள முடிந்தது,'' என்று அவர்கள் கூறினர்.

இந்திய தொழில் முனைவோர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, இந்த Brief-i திட்டம் கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]