பொது

போலி ஆவணம் வழக்கில் பீட்டருக்கு 3 ஆண்டுகள் சிறை & 50,000 ரிங்கிட் அபராதம்

04/03/2025 05:34 PM

புத்ராஜெயா, 04 மார்ச் (பெர்னாமா) --    11 ஆண்டுகளுக்கு முன்னர், UMS எனப்படும் மலேசிய சபா பல்கலைக்கழகத்தில் இயந்திர மற்றும் மின்சார அமைப்பின் பராமரிப்பு பணிகளுக்காக போலி குத்தகை அறிக்கையைப் பயன்படுத்திய வழக்கில், சபா மாநில அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு முன்னாள் அமைச்சர், டத்தோ பீட்டர் அந்தோணிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும், 50,000 ரிங்கிட் அபராதத்தையும் தீதிமன்றம் நிலைநிறுத்தியது.

2022-ஆம் ஆண்டு மே மாதம், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து 54 வயதான பீட்டர் செய்த மேல்முறையீட்டை நிராகரித்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், டத்தோ அஹ்மாட் சைடி இப்ராஹிம், டத்தோ முஹமட்  சைனி மஸ்லான் மற்றும் டத்தோ அஸ்மி அரிஃபின் ஆகியோர் அந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.

இன்று முதல், மெலாலாப் மாநில சட்டமன்ற உறுப்பினரின் சிறைத்தண்டனையைத் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது 15 மாத சிறைத்தண்டனையை ரத்து செய்ய, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி, பீட்டர் மேல்முறையீடு செய்திருந்தார்.

அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 468-இன் கீழ், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 13 மற்றும் ஆகஸ்ட் 21 ஆகிய தேதிகளில் புத்ரா ஜெயா, பெர்டானா புத்ராவில் உள்ள பிரதமரின் தலைமை அந்தரங்கச் செயலாளர் அலுவகலத்தில் அவர் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)