பொது

வானொலி அறிவிப்பாளர்கள் பதிவேற்றம் செய்த காணொளி குறித்து கண்டனம்

04/03/2025 05:50 PM

கோலாலம்பூர், 04 மார்ச் (பெர்னாமா) --    இன்று காலை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட ERA எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களின் காணொளியை உட்படுத்திய செயலுக்குத் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங்  கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வெளியிட்ட அறிக்கையின் படி, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

வானொலி நிலையங்கள் போன்ற ஊடகங்கள் நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் பொறுப்பு வகிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தியோ நீ சிங் வலியுறுத்தினார்.

தைப்பூசத்தை அவமதிக்கும் வகையில், ERA எப்.எம்-இன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த வானொலி அறிவிப்பாளர்களின் செயல் குறித்து, ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வாழும் பல்வேறு மக்களின் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் புரிந்துக் கொள்ளும் வகையில் பல முயற்சிகளை, ஒருமைப்பாட்டு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், பொதுமனப்பான்மையை மக்கள் மத்தியில் வடிவமைக்கும் மிகப் பெரிய கடப்பாட்டைக் கொண்டிருக்கும் ஊடகங்களின் இதுபோன்ற செயல்கள், அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெரும் தடையாக இருப்பதாக, செனட்டர் சரஸ்வதி சாடினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)