தெமர்லோ, 04 மார்ச் (பெர்னாமா) - 2024ஆம் ஆண்டு 15 மணிநேரம் இடைவிடாது உடற்பயிற்சி செய்து உலக அளவில் சாதனைப் படைத்த பின்னர் இவ்வாண்டு மூன்று மலேசிய சாதனைகளைப் படைக்கும் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளார் பகாங், கோலா லிப்பிசைச் சேர்ந்த 28 வயதுடைய ஜெய் பிரபாகரன் தேவர் குணசேகரன்.
அதற்காக நாள்தோறும் கடுமையான உடற்பயிற்சியையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
"கோலாலம்பூரிலுள்ள ஓர் உடற்பயிற்சி மையத்தில் தான் இந்த சாதனைகளை நான் படைக்கவிருக்கிறேன். எனது இந்த முயற்சிக்கு தாயார் உட்பட குடும்பத்தாரும் நண்பர்களும் முழு ஆதரவு வழங்கியுள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், இம்மூன்று சாதனைகளைப் படைப்பதற்கான பயிற்சியை இவ்வாண்டு ஆரம்பத்திலேயே தாம் தொடங்கிவிட்டதாக Dr Kjey என்று பலராலும் அறியப்படும் ஜெய் பிரபாகரன் கூறினார்.
"நாளொன்றுக்கு மூன்று முறை பயிற்சி செய்கிறேன். இம்முறை நான் மேற்கொள்ளவிருக்கும் மூன்று சாதனைகளும் கால்களை பயன்படுத்தி செய்ய விருப்பத்தால் அதற்கு கூடுதலாக பயிற்சி அளித்து வருகிறேன். அதேவேளையில் அளவோடு உண்ணும் பழக்க முறையையும் நான் சற்று மாற்றியுள்ளேன்," என்றார் அவர்.
இதனிடையே, பல சவால்களையும் போராட்டங்களையும் கடந்து தாம் செய்து வரும் பயிற்சி நிச்சயம் தமக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று அவர் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும், இத்தகைய முயற்சிகள் வருங்கால இளைஞர்களுக்கு ஊக்குவிப்பாக அமையும் என்றும் ஜெய் பிரபாகரன் கூறினார்.
ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் இப்போட்டியில், ஒவ்வோர் உடற்பயிற்சியையும், வழங்கப்பட்டிருக்கும் ஐந்து மணிநேரத்திற்குள் குறைந்தது மூவாயிரம் முறை வரை செய்வதற்கு தாம் உத்தேசித்துள்ளதாக ஜெய்பிரபாகரன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)