பொது

வானொலி நிலைய ஊழியர்களின் செயல்; மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் 

04/03/2025 07:10 PM

கோலாலம்பூர், 04 மார்ச் (பெர்னாமா) --  வானொலி நிலைய ஊழியர்களின் காணொளிக்கு மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தைப்பூசத்தின் காவடி ஆட்டத்தை கேலி செய்யும் வகையிலான அவர்களது நடவடிக்கை, மலேசியாவில் உள்ள இந்துக்களின் மத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக என்று அதன் தலைவர் கணேசன் தங்கவேலு தெரிவித்துள்ளார்.

''வானொலி நிலையத்தின் பணியாளர்கள் செயல் மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய செயலாக இருக்கின்றது. குறிப்பாக, நாம் கொண்டாடும் தைப்பூசத் திருவிழாவைச் சித்தரித்து காவடி ஆட்டம் ஆடுவது போல பாவனை செய்து வேல் வேல் என்று சமயத்தின் தொன்மையை சிறுமைப்படுத்துவது நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்நாட்டில் ஒவ்வொரு சமயத்தினருக்கும் வெவ்வேறு வகையிலான தாற்பரியங்கள் உண்டு. அதனை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்,'' என்றார் அவர்.

இதனிடையே, பல்லின மக்கள் வாழும் நாட்டில் உணர்ச்சிப்பூர்வமான சமய விவகாரங்களில் தலையிடுவதில் மலேசியர்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

''அதே வேளையில், போலீஸ் படையும் தொடர்பு அமைச்சும் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, இந்த வானொலி நிலையம் இந்து சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்,'' என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவிருப்பதால் மலேசியர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் கணேசன் வலியுறுத்தினார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]