ஷா ஆலம், 23 ஜூன் (பெர்னாமா) -- அம்னோ பிரதிநிதி கூட்டத்துடன் இணைந்து எந்தவொரு தீர்மானத்தையும் சமர்ப்பிக்க அக்கட்சியின் அனைத்து தொகுதிகளுக்கும் அனுமதி உண்டு.
எழுப்பப்பட்ட விவகாரங்களை ஆராய, அத்தீர்மானங்கள் சேகரிக்கப்பட்டு கட்சித் தலைமைத்துவத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அம்னோ தகவல் பிரிவு தலைவர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஒத்மான் சைட் கூறினார்.
''யார் வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்யலாம். அது அவர்களின் உரிமை,'' என்றார் அவர்.
அம்னோவில் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் உறுப்பியம் இடைநீக்கம் செய்யப்பட்டத்தை மீட்டுக் கொள்வதற்கான தீர்மானம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் அசாலினா அவ்வாறு குறிப்பிட்டார்.
அதேவேளையில், இவ்விவகாரம் தொடர்பில், அம்னோ இன்னும் விண்ணப்பம் எதையும் பெறவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
ஹிஷாமுடினை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்ததை மீட்டுக் கொள்வதற்கான தீர்மானத்தை அம்னோ பரிசீலிப்பதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனிடையே, அம்னோ பிரதிநிதிகள் கூட்டத்தின்போது தொகுதிகள் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு தீர்மானத்தையும் கட்சியின் தலைமைத்துவம் ஆராய்வது அதன் பாரம்பரியமும் நடைமுறையும் ஆகும் என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)