கோத்தா கினபாலு , 12 ஜூலை (பெர்னாமா) - இவ்வாண்டு நாடு முழுவதிலும், RIBI எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான பராமரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசாங்கம் ஐந்து கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் நோக்கத்திற்காக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மெங் தெரிவித்தார்.
நாடளாவிய அளவில் இத்திட்டத்தை கட்டம் கட்டமாக செயல்படுத்துவதற்கு தமது அமைச்சிற்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, சபாவில் 15 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 27 லட்சம் ரிங்கிட் நிதி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
"இன்று மாலையில் நாங்கள் 27 லட்சம் ரிங்கிட்டிற்கு ஒப்புதல் அளித்தோம். அந்நிதியைப் பெறுவதற்கு ஒவ்வொரு இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலமும் விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையது. அதிகபட்சமாக இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரிங்கிட் வரை, அரசாங்கத்தின் கொள்திறன் மற்றும் அவசரத் தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் வழங்குவோம்,'' என்றார் அவர்.
இதனிடையே, பராமரிப்பு, மேம்படுத்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளை உட்படுத்தி நாடு முழுவதுமுள்ள 35 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு தமது அமைச்சு 48 லட்சத்து பத்தாயிரம் ரிங்கிட் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் Nga விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)