கோலாலம்பூர், 12 ஜூலை (பெர்னாமா) - வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லாவிட்டாலும் மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் உள்நாட்டில் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்வதற்கான தமது கடப்பாட்டை சுகாதார அமைச்சு வெளிப்படுத்தியது.
நாட்டின் பொது சுகாதார அமைப்பில் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்வதற்காக அமைச்சு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில்...
ஒப்பந்த மருத்துவர்களுக்கான நிரந்தரப் பணி நியமன செயல்முறையை விரைவுபடுத்துவதும் அடங்கும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
''இருப்பினும், எங்கள் மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், அடிப்படை பயிற்சி பதவிகளைக் கொண்ட தாதியர்கள் ஆகியோரையும் நாங்கள் எங்கள் வசம் வைத்துகொள்ள விரும்புகிறோம். நாங்கள் முன்னதாக சுட்டிக்காட்டிய மற்றும் தற்போது முன்னெடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை அதற்காக மேற்கொள்வோம். மேலும் எங்களுடன் இணைந்திருப்பதற்கான முழு காரணத்தையும் வழங்க இவ்வகை நடவடிக்கைகள் முன்னிலைப்படுத்தப்படும்,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2025 ஆசியான் டெங்கி தினத்துடன் கூடிய தேசிய அளவிலான ஏடிஸ் 1.0 க்கு எதிரான துப்புரவுப் பணியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சுல்கிப்ளி அவ்வாறு கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகள் தற்போது மலேசிய பொது சுகாதார ஊழியர்களை, குறிப்பாக மருத்துவர்களை கூடுதல் ஊதிய சலுகைகளுடன் பணியாற்ற தீவிரமாக ஈர்த்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.
இதனிடையே, அடுத்த மாதம் கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், மருத்துவர்கள் மற்றும் பொது மருத்துவர்களுடன் நேரடி நேர்காணல் நடைபெறவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)