கோலாலம்பூர், 07 ஆகஸ்ட் (பெர்னாமா) - இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் கடந்த கால தோல்விகளுக்கு ஒரு நிலையான தலைமைத்துவம் இல்லாததே காரணம் என்று அதன் சிறப்பு செயற்குழு தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் நேற்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பில் கருத்துரைத்த தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பிரபாகரனின் கூற்றை கடுமையாக சாடியிருக்கிறார்.
டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கியிருக்கும் இத்தகைய உயரிய பொறுப்பை முறையாக கவனிக்க வேண்டிய பிரபாகரன், பிரதமரையோ அவரின் அலுவலகத்தையோ அல்லது அரசாங்கத்தில் இருப்பவர்களையோ குறை கூறுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.
"நான் மித்ராவின் தலைவராக இருந்த காலகட்டத்தில் அரசாங்கம் வழங்கிய பத்து கோடி ரிங்கிட்டை முறையாகப் பயன்படுத்தி முடித்தோம். அதுவும் அனைத்தும் வெளிப்படைத்தன்மையாகவே இருந்தது. அனைத்து கணக்கு வழக்குகளையும் இன்றும் நான் வைத்திருக்கிறேன். யார் கேட்டாலும் அதை காட்டுவதற்கு நான் தயாராக இருக்கிறேன். இப்படி இருக்கையில் கடந்த காலத்தில் மித்ரா தோல்வியடைந்ததாக எவ்வாறு அவர் கூறமுடியும்? வேலை செய்ய முடியாவிடில் சொல்லுங்கள், அதை செய்வதற்கு நிறைய பேர் உள்ளனர். அதைவிடுத்து மற்றவர் மீது வீண் பழிபோடுவதையும் இனி அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்," என்று ரமணன் வலியுறுத்திக் கூறினார்.
இதனிடையே, S-M-E Corp எனப்படும் S-M-E CORPORATION MALAYSIA வழி, I-BAP எனும் இந்திய சிறு வணிகர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அடுத்த வரவு, செலவுத் திட்டத்தில் அதற்காக ஒரு கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கிடும்படி கேட்கவிருப்பதாகவும் ரமணன் குறிப்பிட்டார்.
"இன்று வரை மானியம் பெறுவதற்காக விண்ணப்பித்திருவர்களின் எண்ணிக்கை எண்பது லட்சம். ஆக இந்த நிலையில் ஒரு கோடி ரிங்கிட் நிதி கோரினால் மட்டுமே அடுத்த ஆண்டுகளில் இன்னும் அதிகமான வணிகர்களுக்கு உதவி புரிய முடியும். அடுத்தடுத்த ஆண்டுகளில் விண்ணப்பங்கள் இன்னும் அதிகரித்தால் பிரமதமரிடம் கூடுதலான நிதி பெறுவதற்கும் விண்ணப்பிக்கலாம்," என்றார் அவர்.
இம்முறை முதலீடு மற்றும் அடிப்படை பொருட்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டுகளில் வணிக தளத்திற்கான வாடகை உள்ளிட்ட இன்னும் சில அம்சங்களுக்கும் அத்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் கூறினார்.
இன்று கோலாலம்பூர் SME CORP தலைமையகத்தில் நடைபெற்ற I-BAP மானியம் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)