புத்ராஜெயா, 27 ஆகஸ்ட் (பெர்னாமா) -- எந்தவொரு பிரச்சனையிலோ அல்லது கட்சியின் நடவடிக்கையிலோ அதிருப்தி அடைந்த அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும் கட்டொழுங்கு வாரியத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பது உட்பட தகுந்த வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
1946-ஆம் ஆண்டு முதல் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு கட்சியான அம்னோ, சீரமைக்கப்பட்ட கட்டொழுங்கு அமைப்பையும் செயல்முறையையும் கொண்டுள்ளதாக அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் கூறினார்.
''அம்னோ 1946-ஆம் ஆண்டு முதல் இயங்கும் ஒரு பழைய கட்சி. அம்னோவிற்கு அதன் சொந்த செயல்பாடும் கட்டொழுங்கும் உள்ளது. அதில், திருப்தி கொள்ளாதவர்கள், கட்சியின் கட்டொழுங்கு வாரியத்திற்கு அறிக்கை அளிக்கலாம் என்பதை நான் காண்கிறேன். ஆனால், அம்னோ ஒரு பாரம்பரிய கட்சி. எந்தவொரு பிரச்சனை இருந்தாலும் அக்கட்சி கலந்துரையாடலை மேற்கொள்ளும்,'' என்று அவர் தெரிவித்தார்.
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலேவுக்கும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லொக்மான் நோர் அடாமுக்கும் இடையிலான வாக்குவாதம் குறித்து கேட்டபோது அசாலினா அவ்வாறு கூறினார்.
உறுப்பினர்களை விமர்சிக்க, ஆதரிக்க அல்லது உடன்பட அனுமதிக்கும் ஜனநாயகக் கொள்கைகளை அம்னோ பின்பற்றினாலும், அனைத்து தீவிரமான பிரச்சனைகளையும் உச்சமன்ற செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடியும் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)