ஜாலான் பார்லிமன், 04 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி முதலாம் தேதி அமல்படுத்தப்பட்ட ஒப்பந்த நியமனங்களுக்கு முன்பே நியமிக்கப்பட்ட மொத்தம் 2,361 பொது சேவை துறை அதிகாரிகள் நிரந்தர பணியில் அமர்த்தப்பட்டனர்.
மேலும், ஓய்வூதியத் திட்டம் அல்லது ஊழியர் சேம நிதி வாரியம், KWSP ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும் அவர்கள் தகுதி பெற்றிருப்பதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்தார்.
அந்த எண்ணிக்கையில் 1,997 அதிகாரிகள் அல்லது 84.58 விழுக்காட்டினர் ஓய்வூதியத் திட்டத்தையும் 364 பேர் அல்லது 15.42 விழுக்காட்டினர் KWSP திட்டத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாக டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா விவரித்தார்.
''2025-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி வரையிலான எஸ்.பி.ஏ தரவுகளின்படி, இடைக்கால ஒப்பந்த நியமனம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட மொத்தம் 2361 அதிகாரிகள் முன்னதாகவே பணியில் உறுதிப்படுத்தலுக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளனர். அவர்கள் ஓய்வூதியத் திட்டம் அல்லது ஊழியர் சேம நிதி வாரியம் போன்ற தேர்வுகளுக்குத் தகுதியுடையவர்கள்'', என்றார் அவர்.
2024 முதல் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் மொத்தம் 18,881 அரசு ஊழியர்கள் பொது சேவை ஆணையத்தால் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட பொது சேவை துறை ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேர்வுகள் குறித்து செனட்டர் முஹமட் ஹஸ்பி முடா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது டாக்டர் சலிஹா அந்த தகவல்களை பகிந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)