புத்ராஜெயா, 04 செப்டம்பர் (பெர்னாமா) -- அண்மையில், பேராக், ஈப்போவில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பெண் ஒருவர் பிரதான மேடையில் ஏறிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் இன ரீதியில் போலிப் பதிவுகளை வெளியிட்டது குறித்து தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்.சி.எம்.சி நேற்று மேலும் மூவரிடம் வாக்கு மூலங்களைப் பதிவு செய்தது.
சீனப் பெண்மணி ஒருவர் அவ்வாறு செய்ததாகக் கூறும் பதிவு உண்மைக்குப் புறம்பானது என்பதோடு, இத்தகைய தவறான தகவல் சமூகத்தினரிடையே இனப் பதற்றத்தையும் எதிர்மாறான கருத்துகளையும் தூண்டக் கூடும் என எம்.சி.எம்.சி கூறுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் கெடாவின் கோலா நெராங், குவாந்தானின் பெசேரா போலீஸ் நிலையங்களோடு பினாங்கு, வடகிழக்கு மாவட்ட போலீஸ் தலைமையகத்திலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக எம்.சி.எம்.சி கூறியது.
மொத்தம் மூன்று கைப்பேசிகள், மூன்று சிம் அட்டைகள் மற்றும் ஒரு தரவு சேகரிப்பு அட்டை ஆகியவற்றை எம்சிஎம்சி அவர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளது.
1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தை உட்படுத்திய 588-வது சட்டம், செக்ஷன் 233-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதால் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஐந்து லட்சம் அபராதம், ஈராண்டுகளுக்கும் குறையாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
மேலும், சமூக ஊடகங்களில் எந்தவொரு உள்ளடக்கத்தையும் வெளியிடுவதற்கு முன்னதாக, அத்தகவலின் நம்பகத்தன்மையை முறையாக சரிபார்த்து கொள்ளுமாறு எம்.சி.எம்.சி பொதுமக்களுக்கு நினைவூட்டியது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)