Ad Banner
Ad Banner
 பொது

மாணவி பாலியல் வன்கொடுமை; இரு மாணவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்

16/10/2025 05:10 PM

அலோர் காஜா, 16 அக்டோபர் (பெர்னாமா) -- இரண்டு வாரங்களுக்கு முன்பு அலோர் காஜாவில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் படிவ மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நான்கு மாணவர்களில் இருவர் மீது, இன்று, அலோர் காஜா சிறார் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கூட்டு பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு எதிரான பாலியல் உறவு மற்றும் உடல் ரீதியான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை, எஸ். பி. எம் தேர்வு எழுதவிருக்கும் 17 வயதுடைய அவ்விரு மாணவர்களும் எதிர்கொள்கின்றனர்.

எனினும், குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவர் மட்டுமே அம்மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட நிலையில் மற்றொருவர் அவற்றை மறுத்து விசாரணைக் கோரினார். 

15 வயது மாணவியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தின் அடிப்படையில், குறைந்தபட்சம் பத்தாண்டுகள் அல்லது அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 375B-இன் கீழ் முதல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. 

இயற்கைக்கு எதிரான பாலியல் உறவை மேற்கொண்ட குற்றத்திற்காக, அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகைச் செய்யும் அதேச் சட்டம் செக்‌ஷன் 377B-இன் கீழ் இரண்டாவது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

உடல் ரீதியான பாலியல் வன்கொடுமையைப் புரிந்த குற்றத்திற்காக, அதே தண்டனைகளை விதிக்க வகைச் செய்யும் 2017-ஆம் ஆண்டு சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் செக்‌ஷன் 14(a)-இன் கீழ் மூன்றாவது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தலா ஏழாயிரம் ரிங்கிட் ஜாமின் தொகையில் மஜிஸ்திரேச் டாக்டர் தியோ ஷூ யீ அவ்விருவரையும் விடுவித்தார். 

தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பதாக, குற்றம் சுமத்தப்பட்ட முதல் மாணவரின் ஆவணங்கள் மற்றும் இரண்டாவது மாணவரின் குணநல அறிக்கை சமர்ப்பிப்புகளுக்காக, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]