Ad Banner
Ad Banner
 பொது

தீபாவளிக்கான இறுதி நேர முன்னேற்பாடுகளில் இந்தியர்கள்

19/10/2025 06:33 PM

பிரிக்ஃபீல்ட்ஸ் / கோலாலம்பூர், 19 அக்டோபர் (பெர்னாமா) --   விடிந்தால் தீபாவளி என்றாலும் புத்தாடை, பலகாரம், பட்டாசு, அலங்கரிப்புப் பொருள்கள் வாங்கும் ஆர்வத்தில் பலர் இன்னும் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருப்பர்.

இன்று வார விடுமுறை என்பதால், அதனையும் சாதகமாக பயனபடுத்தி நாட்டில் தீபாவளியை கொண்டாடவிருக்கும் இந்தியர்கள் பண்டிக்கைக்கான பொருள்களை வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில், கோலாலம்பூரில், இந்தியர்களின் வணிக மையமான, பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவிலும் மக்களின் படையெடுப்பு, திருநாளைக் களைகட்டச் செய்தது.

ஆண்டுக்கு ஒருமுறைக் கொண்டாடும் தீபாவளித் திருநாளைக் கோலாகலமாக வரவேற்கும் நோக்கில் மக்கள் தங்களின் வீடுகளுக்குத் தேவையான பல்வகைப் பொருட்களை தீவிரமாக வாங்கிக் கொண்டிருந்ததை பெர்னாமா செய்திகள் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.

அதிலும், முதல் படையல் உட்பட தீபாவளி தினத்தில் வீட்டில் செய்யும் பூஜைக்குத் தேவையான பூக்கள், மாலைகள், பழங்கள் அனைத்தையும் தயார் செய்து கொள்ளவே அங்கு வந்திருந்ததாக பொதுமக்களில் சிலர் தெரிவித்தனர்.

''இறுதிக் கட்ட ஏற்பாடாக பலகாரங்கள், நாளை கோவிலுக்கு அணிய புத்தாடை, பூஜை பொருள்கள், குறிப்பாக பூக்களும் வாங்க நான் வந்திருக்கிறேன். தீபாவளியைக் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட காத்திருக்கிறோம், என்று லோகன் தெரிவித்தார். 

கடைசி நேரம் வரை பலகாரம் செய்ய முடியாதவர்கள் சிலர், முறுக்கு உட்பட இதர பலகாரங்களை வாங்க வந்திருப்பதால், கடந்த சில தினங்களைக் காட்டிலும் இன்று, வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக வியாபாரி ஒருவர் கூறினார்.

தீபாவளிக்கு முந்தைய நாள் என்பதால், இன்று நள்ளிரவைக் கடந்தும் அங்கு பெரும்பாலான வணிக மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு திறந்திருக்கும் என்று அன்பழகன் தெரிவித்தார்.
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)