கோலாலம்பூர், 29 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த நவம்பர் 27 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையில் நடத்தப்பட்ட ஒபி தீகா சோதனையின் வாயிலாக கெடா மற்றும் பினாங்கில் செயல்பட்டு வந்த திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலான Geng Rusaboy-யின் நடவடிக்கையை போலீசார் முறியடித்தனர்.
அந்த குற்றச்செயல் கும்பலின் மூளையாக செயல்பட்ட நபர் உட்பட, 24 முதல் 42 வயதிலான 15 சந்தேக நபர்களை போலீசார் தேடி வருவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, ஜே.எஸ்.ஜே இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
''கைது செய்யப்பட்ட 17 பேரில், 7 பேர் முன்னர், 2020-ஆம் ஆண்டு, குற்றவியல் சட்டம் செக்ஷன் 130V-இன் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள். 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஜனவரி 2024-இல் விடுவிக்கப்பட்டனர். அவர் வெளியேறியதும், இந்த திட்டமிட்ட குற்றச்செயல் கும்பலில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர்,'' என டத்தோ எம். குமார் கூறினார்.
இன்று புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், டத்தோ குமார் அத்தகவல்களைத் தெரிவித்தார்.
மேலும், கொள்ளை, கடுமையான காயங்களை ஏற்படுத்துவது, இரண்டு கொலை வழக்கில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவது மற்றும் போதைப் பொருள் விநியோகம் போன்ற வன்முறைக் குற்றங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
2020-ஆம் ஆண்டில், போலீசாரால் முறியடிக்கப்பட்ட Geng 35 மற்றும் Geng Rusa Boy-யின் எஞ்சிய உறுப்பினர்கள்தான் அக்கும்பல் என்பது விசாரணையில் தெரிய வந்ததாகவும் குமார் கூறினார்.
2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டம், சொஸ்மா-வின் கீழ், அவர்கள் அனைவரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை, கெடா, சுங்கை பெடானி செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)