பெர்லிஸ், 29 டிசம்பர் (பெர்னாமா) -- பெர்லிஸின் சூப்பிங், பிந்தோங் மற்றும் குவார் சான்ஜி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் ஏற்பட்டுள்ள காலியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை, தேர்தல் ஆணையம், எஸ்.பி.ஆர்-இடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
கங்கார், பெர்லிஸில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு, அந்த அறிவிக்கை சமர்பிக்கப்பட்டதாக, பெர்லிஸ் சட்டமன்ற தலைவர் ருஸ்ஸெலி ஈஸான் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்காக, அம்மூன்று சட்ட மன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டியதற்கான காரணங்களையும், அந்த அறிவிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக ருஸ்ஸெலி தெரிவித்தார்.
டிசம்பர் 18-ஆம் தேதியோடு, பெர்லிஸ் சட்டமன்றம் மூன்று ஆண்டுகளை நிறைவடைந்த போதிலும், மாநில அரசாங்க நிலைத்தன்மைக்காக அம்மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மாநில அரசாங்கம் உணர்ந்ததாக, அவர் கூறினார்.
2025-ஆம் ஆண்டு பாஸ் அரசியலமைப்பு பிரிவு 76 மற்றும் பிரிவு 15அ(1)(b)-இன் கீழ் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி உடனடியாக நீக்கப்பட்டதாக, டிசம்பர் 24-ஆம் தேதி, பாஸ் கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹடி ஆவாங் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, பெர்லிஸ் அரசாங்க அரசியலமைப்பின் பிரிவு 50அ உட்பிரிவு ஒன்று, உட்பிரிவு A, உட்பிரிவு இரண்டிற்கு ஏற்ப, பாஸ் கட்சியை சேர்ந்த சூப்பிங் சட்டமன்ற உறுப்பினர் சாட் செமான், பிந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஃபாக்ருல் அன்வார் இஸ்மாயில் மற்றும் குவார் சான்ஜி சட்டமன்ற உறுப்பினர் முஹமட் ரிட்சுவான் ஹஷீம் ஆகியோரை அக்கட்சி நீக்கியதை கடந்த 25-ஆம் தேதி ருஸ்ஸெலி அறிவித்தார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)