| BREAKING NEWS | Warga ATM terlibat aktiviti tidak bermoral, rosakkan imej ATM akan disingkir daripada perkhidmatan - Mohamed Khaled | |
கோலாலம்பூர், டிசம்பர் 29 (பெர்னாமா) -- அண்மையில் நெகிரி செம்பிலான், நீலாய், தேசா பால்மா பகுதியில் சுயமாக தயாரிக்கப்பட்ட வெடிப்பொருள் IED வெடித்த சம்பவத்தில் எவ்வித பயங்கரவாத கூறுகளோ அல்லது குழு அல்லது அமைப்புடன் தொடர்போ கொண்டிருக்கவில்லை.
அச்சம்பவம் தனிப்பட்ட நிகழ்வாக இருக்கலாம் என்றும் எவ்விதமான குற்றவியல் கட்டமைப்பு அல்லது திட்டமிட்ட குற்றச்செயல் கும்பல்களுடன் தொடர்பு இல்லாதது என்றும் போலீசாரின் தொடக்க விசாரணையில் தெரிய வந்துள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை JSJ இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
“தற்போதைக்கு மேற்கொள்ளப்பட்ட தொடக்க விசாரணையின் அடிப்படையில், பிற குழுக்களின் நடவடிக்கைகளில் எவ்வித ஈடுபாடும் இருப்பதாக எங்களால் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” என்றார் டத்தோ எம். குமார்
இதனிடையே, சம்பவ இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் வெடிப்பு தன்மைகள் இருந்ததாகவும் அது வைக்கப்பட்டிருந்த நோக்கம் சாத்தியமான இலக்குகள் மற்றும் பிற தரப்பினரின் ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் குமார் விவரித்தார்.
சந்தேக நபரின் பின்னணி தொடர்பான விசாரணைகள் இன்னும் தொடர்வதாகவும் அந்நபர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் வாக்குமூலம் பதிவு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசாரணைக்கு உதவுவதற்காக அச்சந்தேக நபர் ஜனவரி 3-ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)