Ad Banner
Ad Banner
 பொது

சர்ச்சைக்குரிய குரல் பதிவு சி.எஸ்.எம்-இடம் ஒப்படைக்கப்பட்டது

29/12/2025 05:53 PM

கோலாலம்பூர், டிசம்பர் 29 (பெர்னாமா) -- கடந்த மாதம் மலாக்கா, டுரியன் துங்கல்-லில் மூன்று ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பரவலாகப் பகிரப்பட்ட குரல் பதிவு மீது தடயவியல் பகுப்பாய்வை மேற்கொள்ளும் பொருட்டு அது CyberSecurity Malaysia சி.எஸ்.எம்-இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்தவர் உட்பட குடும்பத்தினரிடமிருந்தும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளிடமிருந்தும் குரல் ஒப்பீடுகள் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக இது மேற்கொள்ளப்படுவதாக புக்கிட் அமான குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

''நாங்கள் இன்னும் மலேசிய சைபர் செக்கியூரிட்டியின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். முக்கியமான ஆதாரங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன். சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் குரல் இடம் பெற்றிருப்பதாகக் கூறும் குரல் பதிவைப் புகாரளித்தவர் சமர்ப்பித்தார். எனவே நாங்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும்.'' என்றார் டத்தோ எம். குமார்.

குரல் பதிவு பகுப்பாய்வின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் அதேவேளையில் தொடர் உத்தரவு மற்றும் ஆலோசனைக்காக இதன் விசாரணை அறிக்கை தேசிய சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக டத்தோ எம். குமார் கூறினார்.

வழக்கு விசாரணை தொடங்கியதிலிருந்து இதுவரை 45 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது எந்தவோர் அமலாக்க நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபடவில்லை என்றும் டத்தோ குமார் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)