Ad Banner
 சிறப்புச் செய்தி

கே.எல்.ஐ.ஏவில் மீண்டும் ஐயப்ப பக்தர்களுக்கான சிறப்பு வழித்தடம்

04/01/2026 05:49 PM

சிப்பாங், ஜனவரி 04 (பெர்னாமா) -- இந்தியா கேரளாவில் உள்ள சபரிமலைக்கு யாத்திரையைத் தொடரும் மலேசியாவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் பயணத்தை எளிமையாக்கும் வகையில் கடந்தாண்டைப் போல இவ்வாண்டும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் கே.எல்.ஐ.ஏவில் சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்களின் வசதி பாதுகாப்பு மற்றும் நேர நிர்வகிப்பை நோக்கமாகக் கொண்டு Malaysia Airports குழும நிறுவனம் MAHB உடன் இணைந்து போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்த இம்முயற்சி அவர்களின் ஆன்மீகப் பயணத்திற்குப் பெரும் பயனாக அமைவதாகச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் முனைவர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் மலேசியாவிலிருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர்.

அதில் பெரும்பாலானோர் முதியவர்களாக இருப்பதால் அவர்களின் பயணம் பாதுகாப்பானதாக அமைய கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத் தாம் போக்குவரத்து அமைச்சின் பார்வைக்குக் கொண்டு சென்றதன் விளைவாக இரண்டாவது முறையாக இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பதாக முனைவர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

''விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் 48 நாட்கள் விரதமிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்காக AirAsia, Batik Air, Malaysia Airline உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இவ்வாண்டும் சிறப்பு வழித்தட  ஏற்பாடுகளைச் செய்துள்ளன. ஐயப்ப வழிபாட்டிற்காகக் காலணிகள் அணியாமல் வரும் பக்தர்களுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தச் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன'', என்றார் முனைவர் குணராஜ் ஜோர்ஜ்.

இந்தியாவிற்குச் செல்லும் இதர பயணிகளோடு சேர்ந்து பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைச் செவிமடுத்து உடனடியாக அதற்கான தீர்வை வழங்கிய தரப்பினருக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அதோடு, யாத்திரைக்காகக் கடல் கடந்து பயணம் மேற்கொள்ளும் மலேசிய ஐயப்ப பக்தர்களுக்குச் சிறப்பு காப்பூறுதி திட்டத்தையும் மலேசிய ஐயப்ப பக்தர்கள் சேவை சங்கம் அறிமுகப்படுத்தியிருப்பதாக அதன் தலைவர் யுவராஜா குப்புசாமி கூறினார்.

''மலேசியாவிலிருந்து சபரிமலைக்கு யாத்திரை செல்லும் மற்றும் உள்நாட்டில் ஆன்மீகப் பணியில் ஈடுபடும் ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி மலேசிய ஐயப்ப சேவை சங்கம் இந்த ஒரு வருட கால பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது'', என்றார் யுவராஜா குப்புசாமி.

மேலும், ஐயப்ப பக்தர்களுக்கென பிரத்தியேகமாகத் திறக்கப்பட்டுள்ள சிறப்பு காத்திருப்பு இடம் மற்றும் முகப்பிடங்கள் நேற்று தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்குக் கே.எல்.ஐ.ஏ 1 மற்றும் கே.எல்.ஐ.ஏ 2 ஆகிய இரண்டு விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வழித்தடங்களும் முகப்பிடங்களும் தங்களுக்குப் பல்வேறு வகையில் பயன் தருவதாகச் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் சிலர் கூறினர்.

''ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தால் ஐயப்ப பக்தர்கள் சிரமமின்றி பயணம் செய்ய முடியும். இந்த முறை கவுண்டர்களில் எங்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் மிக விரைவாகவும் நேர்த்தியாகவும் சேவைகள் வழங்கப்பட்டன'', என்றார் டத்தோ ஶ்ரீ சுப்ரமணியம் பொன்னையா.

''இரண்டாவது ஆண்டாக யாத்திரை செல்லும் எனக்கு, கடந்த முறையை விட இவ்வாண்டு Batik Air செய்திருந்த ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தன. இதே போன்ற சலுகைகள் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்தால் ஐயப்ப பக்தர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும்'', என்றார் பாஞ்சாலி வீரைய்யா

''முன்பெல்லாம் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்யப்பட்டுள்ள சிறப்பான வசதிகளால் தற்போது நேரம் மிச்சமாவதுடன் சிரமமின்றி செல்ல முடிகிறது'', என்றார் கண்ணதாசன் பக்ரி

நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் ஒன்றில் இரவு 8.15 மணிக்குச் சுமார் நூறு பக்தர்கள் சபரிமலை நோக்கிய தங்களின் பயணத்தைப் பாதுக்காப்பாகத் தொடங்கினர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)