Ad Banner
 பொது

ஐந்தாம் தலைமுறையாக மண் பானை தயாரிப்பு துறையில் பீடுநடைப்போடும் ரெகுராஜ்

07/01/2026 05:23 PM

நிபோங் திபால், 07 ஜனவரி (பெர்னாமா) --  தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக திகழும் பொங்கல் பானைகள், ஒரு சமையல் பாத்திரமாக மட்டுமின்றி அவை இயற்கையோடு இணைந்த முன்னோர்களின் அறிவின் பிரதிபலிப்பாகும்.

மண், செம்பு அல்லது பித்தளை ஆகியவற்றால் உருவாக்கப்படும் பொங்கல் பானைகள், அறுவடையின் மகிழ்ச்சியையும், வளத்தின் நன்றியையும் வெளிப்படுத்தும் புனிதச் சின்னமாக கருத்தப்படுகின்றன.

அந்த வகையில், 120 ஆண்டுகளுக்கும் மேலான தங்கள் குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலான பொங்கல் பானை தயாரிப்பு துறையில் சுமார் 32 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ரெகுராஜ் தேவராஜின் சிறப்பு நேர்காணல் தொடர்ந்து இடம்பெறுகின்றது.

பொங்கலையும், பொங்கல் பானையையும் பிரிக்க முடியாது என்பதால் முதல் ஆண்டு தை தொடங்கி அடுத்தாண்டு தை மாதம் வரை ஒரு வருடத்திற்கு முன்னதாகவே பொங்கல் பானைகளைச் செய்ய தொடங்கி விடுவதாக, ரெகுராஜ் தேவராஜ் கூறினார்.

அதோடு, உற்பத்தி செயல்முறைக்கு நேரம் தேவைப்படும் என்பதால் பொங்கல் காலக்கட்டம் முடிந்தவுடன் பானைகளின் கையிருப்பை உறுதிசெய்ய மீண்டும் அவற்றை செய்யத் தொடங்கி விடுவதாக, ஐந்தாம் தலைமுறையாக இத்துறையில் ஈடுபட்டு வரும் அவர் தெரிவித்தார்.

''பொதுவாக பொங்கல் பானைகளை உடனடியாக பெரிய எண்ணிக்கையில் தயாரிக்க முடியாது. எனவே, நாங்கள் ஒரு வருடத்திற்கு இதனை தயாரித்து, அதனை சேமித்து வைத்து அதனை நாங்கள் விற்பனைக்கு அனுப்பினால் தான் அதன் கையிருப்பு 20 ஆயிரம் அல்லது 30 ஆயிரம் வரை இருக்கும்'', என்று அவர் கூறினார்.

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பானைகளுக்கான தேவை மக்கள் மத்தியில் அதிகரிப்பதால் குறைந்தது 10,000 முதல் 25,000 வரையிலான பானைகளைத் தயாரித்து தாம் விற்பனைக்கு அனுப்புவதாக, அவர் கூறினார்.

இந்நிலையில், மண் மற்றும் பித்தளைப் பாத்திரங்களில் பொங்கல் வைப்பதற்கான வேறுபாடுகள் குறித்து விளக்கிய ரெகுராஜ், பானைகளைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

''நல்ல ஓசை உள்ள பானை, அதாவது மணியின் ஓசை கேட்கக்கூடிய பானையாக தேர்வுச் செய்து வாங்க வேண்டும். ஓசை நன்கு கூர்மையாக இருந்தால் அது நல்ல பானை என்று அர்த்தம். பித்தளைப் பாத்திரத்தில் சமைத்தால் அதன் தன்மை வேறுப்படும். ஆனால், மண் பானையில் சமைத்தால் அதன் பதம் மற்றும் ருசி மாறுப்பட்டதாக இருக்கும்'', என்றார் அவர்.

இதனிடையே, மண் பானை தயாரிப்புத் துறையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுச் சேர்க்கும் நோக்கில் இளைஞர்களுக்கு அதுகுறித்த பட்டறைகளையும், பயிற்சிகளையும் வழங்கி வருவதாக அவர் கூறினார்.

எனவே, இதனை ஒரு வியாபாரக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல், இந்தியர்களின் பண்பாடு மாறாது தொடர்கிறது என்பதை தமது தொழிலுக்கே கிடைத்த பெருமையாக ரெகுராஜ் கருதுகின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)