கோலாலம்பூர் , ஜனவரி 08 (பெர்னாமா) -- பி.டி.பி.கே எனப்படும் திறன் மேம்பாட்டு நிதிக் கழகம், நாளை முதல் இணைய விண்ணப்ப செயல்முறைக்கு முழுமையாக மாறும்.
இலக்கவியல் மயமாக்கல் செயல்முறையின் வழியாக, விண்ணப்பத்திற்கான ஒப்புதல் நடைமுறை 14 நாள்களில் இருந்து, ஐந்து நாள்களாக குறையும் என்று
மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இலக்கவியல் உருமாற்றம் முழுமையான இணைய விண்ணப்ப செயல்முறையை உள்ளடக்கியது என்றும் டத்தோ ஶ்ரீ ரமணன் விவரித்தார்.
விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்த இலக்கவியல் கையொப்பங்களின் பயன்பாடு மற்றும் செயலி அறிமுகம் ஆகியவையும் இதில் உட்படுத்தப்பட்டுள்ளன.
இன்று, கோலாலம்பூரில் உள்ள பி.டி.பி.கே-இன் அலுவலகத்திற்கு அலுவல் பயணம் மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சியை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே,பி.டி.பி.கே-இல் கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ரமணன் தெளிவுப்படுத்தினார்.
''தற்போது அவர்கள் நல்ல சூழ்நிலையில் இருப்பார்கள். நல்ல வேலையில் இருப்பார்கள். ஆனால், நிதியை திரும்பச் செலுத்துவதில்லை. எனவே, இதற்காக ஒரு கூட்டம் நடத்தினோம். ஒரு சில திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். முதலாவதாக, அவர்களின் வெளியூர் பயணங்களுக்கு தடை விதிக்கப்போகிறோம். இது வழக்கமான கடனாளிகளுக்கு அல்ல. உதாரணத்திற்கு, ஐந்தாயிரம் ரிங்கிட்டிற்கு மேல் ஊதியம் பெறுபவர்களாக இருந்தால், அவர்களின் கடப்பிதழ் முடக்கப்படும்,'' என்றார் அவர்.
இதுவரை, அந்நிதி கழகத்தின் வழி, ஐந்து லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
அதில், 20 விழுக்காட்டினர் அல்லது ஒரு லட்சம் பேர் இந்திய சமுதாயத்தினர் என்றும் ரமணன் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)