புத்ராஜெயா, ஜனவரி 08 (பெர்னாமா) -- குடியுரிமை அல்லாத துணையைத் திருமணம் புரிந்த மலேசியப் பிரஜை தாயாருக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைக்கு தானியங்கி முறையில் குடியுரிமை வழங்குவது இவ்வாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும்.
குடியுரிமை தொடர்பாக கூட்டரசு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், உள்துறை அமைச்சின் திட்டங்களுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
1964-ஆம் ஆண்டு குடியுரிமை ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம், இரண்டு மொழிகள் அதாவது மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் மேற்கொள்ளப்பட்டதால், நீண்ட காலம் எடுத்ததாக Datuk Seri Saifuddin கூறினார்.
''இரண்டு மொழிகளையும் தேசிய சட்டத்துறை அலுவலகம், ஏ.ஜி.சி மதிப்பாய்வு செய்துள்ளது. அது நிறைவடைந்தால், நாங்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பாராங்களைத் தயார் செய்து, பின்னர் உலகம் முழுவதும் உள்ள மலேசிய பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அடுத்து, மாட்சிமை தங்கிய மாமன்னரின் ஒப்புதல் பெற்று அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்யும் செயல்முறையாகும்,'' என்றார் அவர்.
தங்கள் குழந்தைகளுக்கு குடியுரிமைப் பெறுவதில் நீண்ட காலமாக சிரமங்களை எதிர்கொண்ட தாய்மார்களுக்கு நீதியை உறுதி செய்வதில் மடானி அரசாங்கத்தின் மிகப்பெரிய அடைவுநிலையாக இந்நடவடிக்கை என்றும் அவர் விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)