பெய்ஜிங், 08 ஜனவரி (பெர்னாமா) -- வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
இந்த நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண வேண்டும் என்று அமெரிக்காவை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
''அதிபர் மதுரோவையும் அவரது மனைவியையும் உடனடியாக விடுவித்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்குமாறு சீனா மீண்டும் அமெரிக்காவை வலியுறுத்துகிறது,'' என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவ் நிங் தெரிவித்தார்.
வெனிசுலா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாகத் தடை விதித்து வந்த நிலையில், இந்த தாக்குதல் அனைத்துலக சட்டங்களை மீறியிருப்பதாக, புதன்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
அனைத்துலக சட்டங்களில் அடிப்படையிலோ அல்லது ஐக்கிய நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் அங்கீகாரமோ இல்லாத ஒருதலைப்பட்ச தடைகளை சீனா தொடர்ந்து எதிர்த்து வருவதாக அவர் விளக்கினார்.
மேலும், மதுரோவை அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருப்பதும் அடிப்படையற்றது என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)